1579. ஆக்கம் இல்லார் வறுமையிலார்
அருவம் இல்லார் உருவமிலார்
தூக்கம் இல்லார் சுகம்இல்லார்
துன்பம் இல்லார் தோன்றுமல
வீக்கம் இல்லார் குடும்பமது
விருத்தி யாக வேண்டுமெனும்
ஏக்கம் இல்லார் மகளேநீ
ஏதுக் கவரை விழைந்தனையே.
உரை: நீ காதலிக்கும் தியாகப் பெருமான், செல்வமுடையரல்லர்; அதே நிலையில் வறியவருமல்லர்; அருவம் என்றோ உருவ மென்றோ ஒன்று மில்லார்; தூங்குவதும் விழிப்பதும் இல்லாதவர்; சுகமோ துக்கமோ இல்லாதவர்; மல சம்பந்தமில்லாதவர்; மலநீக்கம் காரணமாக வுண்டாகும் குடும்ப வாழ்வும் அது விளங்க வேண்டுமென்னும் எண்ணமு மில்லாதவர்; அத்தன்மையரை, மகளே, நீ காதலிப்பது என்னை? வேண்டா. எ.று.
வாழ்வார்க்கு அவரவர் வினைக்கேற்பச் செல்வமும் வறுமையும் எய்துவிப்பதன்றித் தான் வினைச் சூழற்கு அப்பாற் பட்டமையின், அவை இலராயினாராதலின், “ஆக்க மில்லார் வறுமையிலார்” என வுரைக்கின்றாள். உலகுயிர்களின் பொருட்டு உருவ அருவங்களைக் கொள்வதன்றித் தமக்கென ஓருருவுமில்லாதவர் என்பதுபற்றி, “அருவ மில்லார் உருவ மில்லார்” என்று கூறுகிறாள். தூக்கமும் விழிப்புமுடையது மாயா காரியமான தேகமுடையார்க்கே யுண்டு; மாயா மண்டலத்துக்கு அப்பாற்பட்ட பெருமானாதலின், அவற்கு இரண்டு மில்லாமையால் “தூக்க மில்லார்” எனச் சொல்லுகிறாள். தூக்கம் கூறவே, விழிப்பு வருவித்துக் கொள்ளப்பட்டது. மல மாயை கன்மம் காரணமாக உயிர்கள் சுக துக்கங்களை அடைகின்றன; அவற்றின் தொடர்பே சிவனுக்குச் சிறிதுமில்லையாதலால், “சுகமில்லார் துன்பமில்லார்” எனவும், “தோன்று மலவீக்கம் இல்லார்” எனவும் இசைக்கின்றாள். தோன்று மலவீக்கம் - தோன்றுதற் கேதுவாகிய மலவீக்கம்; வீக்கம் - கட்டு; பிணிப்புமாம். மலப்பிணிப்பு நீக்கம் பற்றி உலகில் குடும்ப வாழ்வு உளதாவது; அதனுள் அழுந்த மல நீக்கம் பெறும் உயிர் வகைகள் மலமயக்கத்தால் அக் குடும்ப வாழ்வு பெருக விரும்புதலால், அந்நிலையில் நின்கின்றாளாகலின், நற்றாய், “குடும்பமது விருத்தியாக வேண்டுமெனும் ஏக்கம் இல்லார்” என எடுத்து மொழிகின்றாள். ஏக்கம் - வேட்கை. இவ்வாறு உலகுயிர்களாகிய நமக் கொத்த பண்பும் செயலும் இல்லாதவனாகலின், சிவனை நீ காதலிப்பது நன்றன்றென விளக்குவாளாய், “மகளே, நீ ஏதுக்கவரை விழைந்தனையே” என விளம்புகிறாள். (6)
|