158. அண்ணிலே னினை யைய நின்னடி
எண்ணிலே னிதற் கியாது செய்குவேன்
புண்ணினேன் பிழை பொறுத்துக் கோடியால்
தண்ணி னீள்பொழிற் றணிகை யப்பனே.
உரை: தண்ணிய இனிய நிழலைச் செய்யும் நெடிய சோலைகள் நிறைந்த தணிகையப்பனே, நின்னை நெருங்காமல் நினது திருவடியை எண்ணாமல் இருக்கும் இதற்கு யான் செய்வது யாதாம்? பல்வேறு நினைவுகளால் புண்ணுற்றிருக்கும் எளியேனுடைய பிழைகளைப் பொறுத்தருள்க, எ. று.
அண்ணுதல் நெருங்குதல்; ஈண்டு மெய்யாற் சார்ந்து வழிபடுதல். சார்தற்கு இயலாவிடின் நெஞ்சால் நினைதல் இயலுவதாக அதனையும் செய்திேலன் என்பார், “நின்னடி எண்ணிேலன்” என்றும், இக் குற்றத்துக்குக் கழுவாய் ஒன்றும் இல்லை என்றற்கு, “இதற்கு யாது செய்குவேன்” என்றும் கூறுகின்றார். எனினும், மெய்யாற் சாராமையும் நெஞ்சால் நினையாமையும் என் மனத்தை வருத்துகின்றன என்பார், “புண்ணினேன்” என்றும், இப்பிழையைப் பொறுத்தல் வேண்டுமென வேண்டுவாராய்ப் “பிழை பொறுத்துக் கோடியால்” என்றும் முறையிடுகின்றார். கோடி- கொள்ளுக. பொறுத்துக் கோடி என்பதற்கு என் பிழையைப் பொறுத்து அடியவனாக ஏற்றுக் கொள்க என்று உரைப்பினும் அமையும்.
இதனால் தணிகை யப்பனைச் சாராமை நினையாமையாகிய பிழைகளைப் பொறுத்தருள முறையிட்டவாறாம். (8)
|