1580.

     ஊரும் இல்லார் ஒற்றிவைத்தார்
          உறவொன் றில்லார் பகைஇல்லார்
     பேரும் இல்லார் எவ்விடத்தும்
          பிறவார் இறவார் பேச்சில்லார்
     நேரும் இல்லார் தாய்தந்தை
          நேயர் தம்மோ டுடன்பிறந்தோர்
     யாரும் இல்லார் மகளேநீ
          ஏதுக் கவரை விழைந்தனையே.

உரை:

      தியாகப் பெருமான் தமக்கென ஓர் ஊருமில்லாதவர்; திருவொற்றியூரைத் தமது ஊராக வைத்துள்ளார்; தமக்கென ஓர் உறவும் இல்லாதவர்; யாரிடத்தும் பகை இல்லாதவர்; தமக்கு என ஒரு பெயருமில்லாதவர்; எவ்வுலகத்திலும் பிறப்பதும் இறப்பதும் இல்லாதவர்; பிறந்தார் இறந்தார் என்ற பேச்சுக்கே இடமில்லாதவர்; தனக்கு ஒப்பாரில்லாதவர்; தமக்குத் தாயோ, தந்தையோ, நண்பனோ, உடன் பிறந்தவரோ ஒருவருமில்லாதவர்; அத்தன்மை உடையவரை, மகளே, நீ யாது பயன் கருதிக் காதலிக்கின்றாய். எ.று.

     ஓரூரும் ஓருருவு மில்லாதவரென உயர்ந்தோர் உரைப்பதால் “ஊரு மில்லார்” என்று உரைக்கின்றாள். திருவொற்றியூரைத் திருப்பதியாக உடைமையின் “ஒற்றி வைத்தார்” எனக் கூறுகிறாள். இருக்கும் ஊர் இதுவாயினும் இதனையும் ஒற்றி (அடகு) வைத்து விட்டார் என நயம் தோன்றக் கூறுதல் காண்க. மாமன், மாமி போன்ற எத்தகைய உறவினரு மில்லாதவர் என்றற்கு “உறவொன்றில்லார்” எனவும், வேண்டியவர் வேண்டாதவர் என்ற வேறுபாடு எவரிடத்தும் இல்லாதவராகையால் பகையாக ஒருவரும் தமக்கு இல்லாதவர் என்று விளக்குதற்கு “பகை இல்லார்” எனவும் இயம்புகிறாள். அவருக்கெனச் சிறப்பாக ஒரு பெயரும் கிடையாது என்பாள் “பேருமில்லார்” என்றும், இந்த மண்ணுலகத்தும் மேலுள்ள விண்ணுலகத்தும் கீழுள்ள பாதலத்தும் பிறப்பதும் இறப்பதும் இல்லாதவர் என்பாளாய், “எவ்விடத்தும் பிறவார் இறவார்” என்றும், எங்கேனும் பிறந்தார் இறந்தார் என்று பொய்யாக வேனும் யாரும் பேசும் தன்மையில்லாதவர் என்பாளாய் “பேச்சில்லார்” என்றும் எடுத்தோதுகின்றார். நேர் - ஒப்பு. நேயர் - நண்பர். இப்படி ஊரும் பேரும் உறவும் பெற்றோரும் உடன் பிறந்தோருமாகிய ஒருவருமில்லாத ஒருவரை நீ காதலிப்பது நன்றன்று என விளக்கும் கருத்தால் “மகளே நீ ஏதுக்கவரை விழைந்தனை” எனக் கழறிக் கூறுகின்றாள்.

     (7)