1581. தங்கு மருப்பார் கண்மணியைத்
தரிப்பார் என்பின் தார்புனைவார்
துங்கும் அருட்கார் முகில்அனையார்
சொல்லும் நமது சொற்கேட்டே
இங்கும் இருப்பார் அங்கிருப்பார்
எல்லாம் இயல்பில் தாம்உணர்ந்தே
எங்கும் இருப்பார் மகளேநீ
ஏதுக் கவரை விழைந்தனையே.
உரை: பன்றியின் கொம்பை உடையவரும், அக்குமணி மாலையை அணிபவரும், எலும்பு மாலையைப் பூண்பவரும், பெருகுகின்ற அருளைப் பொழியும் மழை மேகம் போன்றவரும், நாம் சொல்லுகின்ற நம்முடைய அன்பு மொழிகளைக் கேட்டு இங்கு மிருப்பாரும், பேசுதலில்லாதபோது அங்குமிருப்பாரும், எல்லாவற்றையும் இயல்பாகவே அறிந்துஎவ்விடத்தும் இருப்பாரும் அவர். இவ்வியல்பினை உடைய பெருமானை, மகளே, நீ என்ன பயன் கருதிக் காதலிக்கின்றாய். எ.று.
பன்றியின் கொம்பை மாலையாக அணிந்தவராதலின், “தங்கும் மருப்பார்” எனக் கூறுகின்றார். தங்குதல் - கெடாது இருத்தல். கண்மணி - அக்குமணி; இதனை உருத்திராட்சம் எனவும் உரைப்பர். இறந்த தேவர்களின் எலும்பை மாலையாகத் தொடுத்தணிவது பற்றி “என்பின் தார் புனைவார்” என வுரைக்கின்றாள். தூங்கும் என்பது 'துங்கும்' எனக் குறுகிற்று. கார் முகில் - மழை நிறைந்த மேகம். மழை மேகம் போலத் திருவருளைப் பெருகப் பொழிதலால் “அருட் கார்முகில் அனையார்” எனச் சிறப்பிக்கின்றாள். சொல்லுதல் - புகழ்ந்து பேசுதல். எங்கும் யாவர்பாலும் நிகழ்வனவற்றை இயல்பாகவே ஒருங்கறியும் அறிவுருவினராதலால் “எல்லாம் இயல்பில் தாம் உணர்ந்தே எங்கும் இருப்பார்” என மொழிகின்றாள். எங்கும் - எவ்விடத்தும், எப்பொருளிலும் குறைவற நீக்கமற நிறைந்திருப்பவர் என்பது குறிப்பு. இப் பெற்றியவரைப் பேணிக் காதலிப்பது பயன் தராது என்பதுபற்றி “மகளே நீ ஏதுக்கவரை விழைந்தனை” எனச் சொல்லுகிறாள். (8)
|