1582.

     துத்திப் படத்தார் சடைத்தலையார்
          தொலையாப் பலிதேர் தொன்மையினார்
     முத்திக் குடையார் மண்எடுப்பார்
          மொத்துண் டுழல்வார் மொய்கழற்காம்
     புத்திக் குரிய பத்தர்கள்தம்
          பொருளை உடலை யாவையுமே
     எத்திப் பறிப்பார் மகளேநீ
          ஏதுக் கவரை விழைந்தனையே.

உரை:

      மகளே நீ காதலிக்கும் தியாகப் பெருமான் புள்ளி பொருந்திய படத்தையுடைய பாம்பை அணிபவர்; சடை விரிந்த தலையை உடையவர்; நீங்காமல் மனைதோறும் பலியேற்பதே பழமைச் செயலாக உடையவர்; முத்திச் செல்வத்தை உடையவர்; கூலியாளாய் மண்ணெடுப்பவர்; தலைவர்களால் பிரம்படி படுபவர்; நெருங்கிய கழலணிந்த தனது திருவடிக்கண் சித்தத்தைப் பதிக்கும் மெய்யன்பர்களின் உடல் பொருள் அனைத்தையும் மயக்கிப் பெற்றுக் கொள்பவராதலால், அவரை நீ காதலிப்பது என்னையோ. எ.று. பாம்பின் படத்தில் புள்ளிகள் நிறைந்திருத்தலால் “துத்திப் படத்தார்” எனச் சொல்கின்றாள். எக்காலத்தும் அன்பர்க்கு அருள் செய்வது கருதிப் பலியேற்பது அப்பெருமானுக்கு இயல்பாதலின், “தொலையாப் பலிதேர் தொன்மையினார்” என்று கூறுகின்றாள். முத்தி வழங்கும் முதல்வராதலின் “முத்திக் குடையார்” என மொழிகின்றாள். மதுரையில் மண் சுமந்ததும் மன்னனால் பிரம்படி பட்டதுமாகிய அருட் செயல்களை “மண் எடுப்பார் மொத்துண்டுழல்வார்” என இகழ்வது போலப் புகழ்ந்தோதுகின்றாள். மெய்யன்பர்களின் சித்தம் சிவன்பாலே எப்பொழுதும் ஒன்றியிருப்பது பற்றி “மொய் கழற்காம் பத்தர்கள்” என்றும், அவர்களுடைய உடல் பொருள் ஆவி மூன்றும் பத்தி யுணர்வு தோன்றிய மாத்திரத்தே சிவனுக்குரியவாய் விடுவதால் அதனைப் “பொருளை உடலை யாவையுமே எத்திப் பறிப்பார்” எனவும் புகல்கின்றாள். ஞானப் பேரின்பம் தந்து பத்தர்களின் உணர்வுச் செயல்களை ஞான நெறியில் இயக்குவதால், அச்செயலை 'எத்திப் பறித்தல்' என இகழ்ச்சி வாய்பாட்டால் இயம்புகிறாள். இவ்வுரைகளால் தன் மகளது காதல் பயனுடையதன்று என்னும் கருத்துடைமை புலப்படுத்தினமையின், “மகளே நீ ஏதுக் கவரை விழைந்தனை” எனக் கழறுகின்றாள்.

     (9)