84. திருவுலாத் திறம்
திருவொற்றியூர்
அஃதாவது
திருவொற்றியூர்த் தியாகப் பெருமான் திருவீதியில் எழுந்தருளும் திருவுலாவின் சிறப்பின் நலம்
எடுத்துரைத்தல், திருவுலா வரவு கேட்ட பெருந்திணை நங்கை அதனைக் காண்டற்கண் உள்ள தன்
காதலன்பு மிகுதியைத் தோழிக்கு எடுத்தோதி உடன் வருமாறு வற்புறுத்துகிறாள். கண்டலது உறங்கேன்
எனவும், பிறரொடு பேசேன் எனவும், குழல் முடியேன் எனவும் இன்னோரன்னவை கூறி நெடுமொழி
புணர்த்தலாம்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1584. தேனார் கமலத் தடஞ்சூழும்
திருவாழ் ஒற்றித் தியாகர்அவர்
வானார் அமரர் முனிவர்தொழ
மண்ணோர் வணங்க வரும்பவனி
தானார் வங்கொண் டகமலரத்
தாழ்ந்து சூழ்ந்து கண்டலது
கானார் அலங்கற் பெண்ணேநான்
கண்கள் உறக்கங் கொள்ளேனே.
உரை: மணம் கமழும் மாலை சூடிய தோழி, தேன் நிறைந்த தாமரைப் பொய்கைகள் மிக்குற்றுச் செல்வமகள் வாழ்கின்ற திருவொற்றியூர்த் தியாகப் பெருமான், வானுலகத்துத் தேவர்களும் முனிவர்களும் கையால் தொழுது பரவவும், மண்ணுலக மக்கள் தலைகுனிந்து வணங்கவும், திருவீதியில் எழுந்தருளும் திருவுலாவின்கண் ஆர்வம் மிகக் கொண்டு, மனம் உவகையால் மலரத் தலைகுனிந்து சென்று என் கண்ணாரக் கண்டாலன்றி நான் படுக்கையிற் கிடந்து உறங்க மாட்டேன், காண். எ.று.
தேன் மிகவுற்று அதனை வண்டினம் உண்டு கழியும் வரையில் விரிதலும் குவிதலும் செய்வதாகையால் தாமரையைத் “தேனார் கமலம்” எனச் சிறப்பிக்கின்றாள். தடம் - பொய்கை. செல்வ வளம் நிறைந்து நிலை பெறுதலால், திருவொற்றியூரைத் “திருவாழ் ஒற்றி” என இயம்புகிறாள். தியாகரவர் என்பது “சாத்தனவன் வந்தான்” என்றாற் போலாகின்றது. தேவரும் முனிவரும் எப்போதும் தொழுதேத்தும் இயல்பினராதலால், “வானா ரமரர் முனிவர் தொழ” எனக் கூறுகிறாள். வானுலகப் போகவாழ்வில் நெடிதுறைகின்றா ராயினும், அவ்வாழ்வு நீடுதல் வேண்டித் தொழுகின்றா ரென்றற்கு “வானா ரமரர்” என விதந்துரைக்கின்றாள். தேவதேவரும் முனிபுங்கவரும் தொழுது நிற்ப, மண்ணக மக்கள் பரவும் திறம் உரைத்தற்கு “மண்ணோர் வணங்க வரும் பவனி” என்று கூறுகின்றாள். ஆர்வம் - மிக்க அன்பு. நிறை யன்பாற் குவியும் மனத்தாமரை உலாக் காட்சி நல்கும் அருளொளியால் விரிவதால் “அகமலரத் தாழ்ந்து கண்டலது” என மொழிகின்றாள். கான் - நறுமணம். அலங்கல் - மாலை. கண்களை விதந்துரைப்பது, வன்புறைப் பொருட்டு.
இதனால், திருவீதியில் பெருமான் தேர்மீது இவர்ந்து வரும் காட்சி யாசை மீதூர்தலின், கண்டே தீர்தல் வேண்டும் என நெடுமொழி நிகழ்த்தியவாறாம். (1)
|