1585. திருமால் வணங்கும் ஒற்றிநகர்
செழிக்கும் செல்வத் தியாகர்அவர்
கருமால் அகற்றுந் தொண்டர்குழாம்
கண்டு களிக்க வரும்பவனி
மருமாண் புடைய மனமகிழ்ந்து
மலர்க்கை கூப்பிக் கண்டலது
பெருமான் வடுக்கண் பெண்ணேநான்
பெற்றா ளோடும் பேசேனே.
உரை: பெரிய மானையும் மாவடுவையும் போன்ற கண்களையுடைய தோழி, திருமாலாகிய தேவதேவர் வணங்கி வழிபடும் திருவொற்றியூரின் கண், செழுமை யுண்டாக எழுந்தருளும் தியாகப் பெருமான், பிறவிக் கேதுவாகும் மலமயக்கம் தீர்க்கும் தவம் புரியும் தொண்டர் கூட்டம் தன்னைக் கண்டு இன்பமுற மேற்கொண்டு வந்தருளும் திருவுலாவை, மாண்பு பொருந்திய மனம் மகிழ்வுற, மலர் போலும் என் கைகளைக் குவித்துத் தொழுது கண்ணாற் கண்டாலன்றி, என்னைப் பெற்ற நற்றாயோடும் நான் பேச மாட்டேன், காண். எ.று.
தேவர்கள் போற்றிப் பரவும் திருவருட் செல்வராதலின், “திருமால்” எனச் சிறந்தெடுத்துக் கூறுகின்றாள். திருமகளும் தானுமாய் நின்று வணங்கும் திறம் விளங்க, நெடுமால் என்னாமல் “திருமால்” என்று குறிப்பிக்கின்றாள். திருவருள் ஞானமும் உலகியற் செல்வ வகையும் மக்களிடத்தே நிறைந்திருப்ப துணர்த்த, “செழிக்கும் செல்வத் தியாகர்” எனப் புகழ்கின்றாள். கரு - பிறப்பு. பிறவிக் கேதுவாகிய மலமயக்கம், “கருமால்” எனப்படுகிறது. திருத்தொண்டர் செய்யும் பணிகளாகிய தவச் செயல்கள் யாவும் பிறவித் துன்பம் கெடல் வேண்டும் கருத்தினவாதலால், தொண்டர்களைக் “கருமால் அகற்றும் தொண்டர் குழாம்” எனக் குறிக்கின்றாள். குழாம் - கூட்டம். பவனி காண்பவருள் மக்களினத்து ஆடவர் பெண்டிரே யன்றி, பெரியோ ரினத்துச் சிவநெறித் தவத் தொண்டர் மிக்குறுவது புலப்பட, “தொண்டர் குழாம் கண்டு களிக்க வரும் பவனி” என்று கூறுகின்றாள். மருமாண்புடைய மனம் என்பதை 'மாண்பு மருவுதலுடைய மனம்' என இயைத்துக் கொள்க. மருவுதல் - பொருந்துதல். மனம் மகிழ்வுறுங்கால், கைகள் மார்பிலும் தலையிலும் சென்று குவிவதால், “மனமகிழ்ந்து மலர்க்கை கூப்பிக்” காண்பது கூறுகின்றாள். பெருமான்கண் 'வடுக்கண்' எனப் பிரித்தியைத்து மான் கண்ணின் பெருமையையும் மாவடுவின் வடிவத்தையுமுடைய கண்ணெனப் பொருள் கொள்க. பெற்றாள் என்றது, ஈன்ற தாயை; இவளை 'நற்றாய்' என்பது நூல் வழக்கு. தாயிற் சிறந்த உறவில்லையாதலால் “பெற்றாளோடும்” என உரைக்கின்றாள். (2)
|