1586. சேல்ஆர் தடஞ்சூழ் ஒற்றிநகர்
சேருஞ் செல்வத் தியாகர்அவர்
ஆல்ஆர் களமேல் விளங்குமுகம்
அழகு ததும்ப வரும்பவனி
நால்ஆ ரணஞ்சூழ் வீதியிடை
நாடிப் புகுந்து கண்டலது
பால்ஆர் குதலைப் பெண்ணேநான்
பாயிற் படுக்கை பொருந்தேனே.
உரை: பால் போன்ற குதலைச்சொற்களைப் பேசும் தோழி, சேல் மீன்கள் வாழுகின்ற பொய்கைகளையுடைய திருவொற்றியூ ரென்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளும் திருவருட் செல்வம் நிறைந்த தியாகப் பெருமான், விடம் தங்கிய கழுத்துக்குமேலே விளக்கமுறும் திருமுகம் அழகு பொங்கத் திருவீதியில் வரும் உலாவை, நான்காகிய வேதங்கள் முழங்கும் மாட வீதிக்குள் புகுந்து, உலா வரும் இடத்தை அடைந்து, அவரை என் கண்களால் கண்டாலன்றி நான் பாய்மேல் படுப்பதை மேற்கொள்ள மாட்டேன். எ.று.
குதலை - நிரம்பா மொழி; அது தெளிந்த பால்போல் இனிய சுவை பொருந்தியதாகலின் “பாலார் குதலை” எனவும், காதற் பருவம் எய்திய இளமகளிர் சொற்களிடை நிகழ்வதாகலின் தோழியைப் “பாலார் குதலைப் பெண்ணே” எனவும் பகர்கின்றாள். சேலார் தடம் - சேல் மீன்கள் நிறைந்து வாழும் பொய்கை. செல்வத்துட் செல்வம் அருட் செல்வம் என்பது பற்றி வரையாது அருள் வழங்கும் தியாகப் பெருமானைச் “செல்வத் தியாகர்” என்று சிறப்பிக்கின்றாள். ஆலார் களம் - ஆலாலம் என்னும் விடம் தங்கிய கழுத்து. கழுத்துக்கு மேலது முகமாதலின், “களம் மேல் விளங்கு முகம்” எனக் குறித்தோதுகின்றாள். திருவுலா வருங்கால் தன்னைக் கண்டு பரவும் மக்கள், தேவர், முனிவர் முதலியோரை அருள் செய்து நோக்கித் தனது சிவவொளி ஒளிரத் திகழ்தலான், “முகம் அழகு ததும்ப வரும் பவனி” என வுரைத்து மகிழ்கின்றாள். நாலாரணம் - இருக்கு யஜூர் சாமம் அதர்வம் என்ற நான்காகிய வேதம். வீதிக்கொரு நான்கு வேதங்களும் மாடவீதி நான்கினும் ஓதப்படுதலின் “நாலாரணம் சூழ் வீதி” என்று நவில்கின்றாள். அகன்று விளங்கும் மாடவீதியில் திருவுலாக் காட்சி நிலவுமிடத்தை மனையின் நீங்கி வீதியில் புகுந்து சென்றடைய வேண்டுதலின், “வீதியிடை நாடிப் புகுந்து” என விளம்புகின்றாள். இவ்வண்ணம் உலாவரும் பெருமானிடம் அடைந்து கண்டு பரவும் முறைமை புலப்பட “கண்டலது” எனக் குறிக்கின்றாள். திருவுலாக் காட்சியைச் சென்று கண்டு இன்புற்று, பின்பு மீள வந்து பாயிற் படுப்பேனே யன்றி வேறொன்றும் செய்யேன் என்பாளாய் “கண்டலது நான் பாயிற் படுக்கைப் பொருந்தேன்” எனப் பகர்கின்றாள். பாயிற் படுக்கைப் பொருந்தேன் என்பது, “தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தல்.” (3)
|