1587.

     செல்வத் துறழும் பொழில்ஒற்றித்
          தெய்வத் தலங்கொள் தியாகர்அவர்
     வில்வந் திகழும் செஞ்சடைமின்
          விழுங்கி விளங்க வரும்பவனி
     சொல்வந் தோங்கக் கண்டுநின்று
          தொழுது துதித்த பின்அலது
     அல்வந் தளகப் பெண்ணேநான்
          அவிழ்ந்த குழலும் முடியேனே.

உரை:

      இருள் நிறம் தங்கிய கூந்தலையுடைய தோழி, மேகங்கள் தங்கித் தவழும் சோலைகளையுடைய திருவொற்றியூ ரென்னும் தெய்வப் பதியில் எழுந்தருளும் தியாகப் பெருமானின், வில்வ மாலை அணிந்த சிவந்த சடையில் மின்னொளி, ஏனைய ஒளிகளைக் கீழ்ப்படுத்தி ஓங்கி ஒளிர வந்தருளும் திருவுலாவை எதிரே நின்று கண்களால் கண்டு, கைகளால் தொழுது, சொன்மாலை மிகச் சொல்லித் துதித்த பின்பன்றி எனது அவிழ்ந்த கூந்தலைக் கோதி முடிக்க மாட்டேன். எ.று.

     அல் - இருள். அளகம் - கூந்தல். கரியகூந்தலை யுடையவளே என்றற்கு “அல்வந்தளகப் பெண்ணே” எனச் சொல்லுகின்றாள். வந்த அளகம் - வந்தளகம் என வந்தது. செல் - மேகம். உயர்ந்து செறிந்து இருண்டு நிற்கும் சோலைகளில் மழை மேகம் படிந்து செல்வது இயற்கையாதலின் “செல்வந்துறழும் பொழில்” எனச் செப்புகின்றார். தெய்வச் சிறப்புப் பெற்ற திருவொற்றியூரை “ஒற்றித் தெய்வத்தலம்” என்று உரைக்கின்றாள். வில்வம் - வில்வ மாலை; சிவபெருமானுடைய சடை மின்னலைப் போல் விளங்குவதாகலின், அதனொளி ஏனைய ஒளிப்பொருள்களை விட மேலாக ஒளி செய்வது பற்றி “செஞ்சடைமின் விழுங்கி விளங்க வரும் பவனி” என்று விளம்புகிறார். சடையின் ஒளிமுன் சூரியன், திங்கள், தீ ஆகியவற்றின் ஒளி மறைந்து ஒடுங்கி ஒழிதலால் இவ்வாறு சொல்லுகின்றாள். பவனி கண்டு நின்று தொழுது சொல் வந்தோங்கத் துதித்தபின் என்று இயைக்க. சொல் - சொல் விளங்கப் பாடப்படும் பாமாலை. பவனி கண்ட பின்னல்லது கூந்தலை முடியேன் என்பது பெருந்திணை நங்கை நிகழ்த்தும் நெடுமொழி என அறிக.

     (4)