1588. சேவார் கொடியார் ஒற்றிநகர்
திகழுஞ் செல்வத் தியாகர்அவர்
பூவார் கொன்றைப் புயங்கள்மனம்
புணரப் புணர வரும்பவனி
ஓவாக் களிப்போ டகங்குளிர
உடலங் குளிரக் கண்டலது
பாவார் குதலைப் பெண்ணேநான்
பரிந்து நீரும் பருகேனே.
உரை: இனிய பாட்டோசை அமைந்த குதலைச் சொற்களையுடைய தோழி, எருதேந்திய கொடியை யுடையவரும், திருவொற்றியூரின்கண் எழுந்தருளும் அருட் செல்வருமாகிய தியாகப் பெருமானின், கொன்றைப் பூக்களாலாகிய மாலை யணிந்த தோள்களை என் மனம் சென்று கூட, என்னுயிர் அவரது காட்சியில் கலக்க எழுந்தருளும் திருவுலாவைக் குறையா மகிழ்ச்சியுடன் என்னுள்ளமும் உடம்பும் குளிரும்படியாகக் கண்ட பின்னன்றி, தண்ணீரையும் விரும்பிப் பருக மாட்டேன். எ.று.
பா - இனிய பாட்டு, ஈண்டு பாட்டிசையாம். குதலை - அன்பு மிகுதியால் குழறிப் பேசும் மொழி. சேவார் கொடி - எருது எழுதிய கொடி. சே - எருது. அருட் செல்வ வள்ளலாதலின் ஒற்றியூர்ப் பெருமானைச் செல்வத் தியாகர் எனச் சிறப்புத் தோன்ற மொழிகிறாள். கொன்றையின் பூமாலை அணிந்த சிவன் தோள்களைப் பூவார் கொன்றைப் புயங்கள் எனப் புகழ்கின்றாள். அகக் கருவியாகிய மனமும், புறக் கருவியாகிய கண்ணும் சேரக் கலந்து இன்புறும் திருவுலாக் காட்சியை “மனம்புணரப் புணர வரும் பவனி” எனப் போற்றுகின்றாள். ஓவாக் களிப்பு - குறையாத மகிழ்ச்சி. திருவுலாக் காட்சி காண்பார் உள்ளமும் மெய்யும் திருவருளால் நிறைவுற்றுக் குளிர்ப்பெய்துதலால், அதனை விதந்து “அகங் குளிர உடலங் குளிரக் கண்டலது” என வற்புறுத்துகின்றாள். காண்பதன் முன் எத்துணை நீர் வேட்கை மிகினும் துளி நீரும் அருந்தேன் என்பாள் போல “பரிந்து நீரும் பருகேனே” என உரைக்கின்றாள். பரிதல் - பரிந்து பருகல்; வேட்கை மீதூர்தலால் ஆர்வமோடு அருந்துதல். (5)
|