159. அப்பன் என்னுடை யன்னை தேசிகன்
செப்பன் என்குலத் தெய்வ மானவன்
துப்ப னென்னுயிர்த் துணைவன் யாதுமோர்
தப்பி லன்பர்சேர் தணிகை வள்ளேல.
உரை: எவ்வகையிலும் குற்றமில்லாத அன்புடைய நன்மக்கள் வந்து வணங்கும் தணிகை வள்ளலாய முருகப் பெருமான் எனக்கு அப்பனும் அன்னையும் குருவுமாவன்; செப்ப முடையவனும் எனக்குக்குலத் தெய்வமும் ஆகுபவன்: எனக்குப் பற்றுக் கோடும், உயிர்த் துணையுமாவன், எ. று.
நினைவும் சொல்லும் செயலுமாகியவற்றில் எவற்றாலும் தவறுபடாத அன்பர்கள் என்றற்கு “யாதுமோர் தப்பில் அன்பர்” என்று கூறுகிறார். அப்பன் - தந்தை. ேதசிகன் - குரு. செப்பன்-செம்மைப் பண்புடையவன். துப்பு - பற்றுக்கோடு; “துன்பத்துள் துப்பாயார் நட்பு” (குறள்) என்றாற் போல.
இதனால் முருகனோடு தமக்குள்ள தொடர்பு புலப்படுத்தியவாறு. (9)
|