1590. சிந்தைக் கினியார் ஒற்றிநகர்
திகழுஞ் செல்வத் தியாகர்அவர்
சந்தத் தடந்தோள் கண்டவர்கள்
தம்மை விழுங்க வரும்பவனி
முந்தப் புகுந்து புளகமுடன்
மூடிக் குளிரக் கண்டலது
கந்தக் குழல்வாய்ப் பெண்ணேநான்
கண்ணீர் ஒழியக் காணேனே.
உரை: மணங் கமழும் கூந்தலையுடைய தோழி, சிந்திக்கும் தோறும் இனிமை தருபவரும், திருவொற்றியூரின்கண் எழுந்தருள்பவருமாகிய செல்வத் தியாகப் பெருமானுடைய அழகிய பெரிய தோள்களைக் கண்களால் காண்பவர்களின் மனத்தைக் கவர்ந்து கொள்ள வருகின்ற திருவுலாவை, யாவர்க்கும் முற்படச் சென்று உடம்பெலாம் புளகிக்கக் கண்கள் குளிர கண்டாலன்றி, என் கண்கள் நீர் சொரிவ தொழியாது, காண். எ.று.
கந்தக் குழல்வாய்ப் பெண் - மணம் கமழும் கூந்தலையுடைய பெண். இசைச்சுரங்கள் கூடிய குழல் போலும் இனிய சொற்களைப் பேசும் பெண்ணே என வுரைத்தலுமொன்று. இப்பொருட்குக் கந்தம், கூட்டம் என்னும் பொருளதாம். சிந்திப்பவர்க்குச் சிறந்து செந்தேன் முந்திப் பொழியும் முதல்வனாதலின், சிவபிரானைச் “சிந்தைக் கினியார்” என்று சொல்லுகிறாள். 'சந்தத் தடந்தோள்' என்பதற்குச் சந்தனம் அணிந்து மணங் கமழும் பெரிய தோள் எனினும் அமையும். ஆடவரின் தோளழகு இளமகளிரின் மனம் கவரும் மாண்புடையதாதலின் “தடந்தோள் கண்டவர்கள் தம்மை விழுங்க வரும் பவனி” என உரைக்கின்றார். “மங்கையர்கள் தம் மனத்தை வாங்கும் தடந்தோளான்” (நள. வெண்) என்று புகழேந்தியார் புகல்வது காண்க. தியாகப் பெருமான் திருவுலாவை மகளிர் பலரும் காண விரும்புவர் என்றும், அவருள் தான் முந்திச் சென்று காண்பதைப் பெருந்திணை நங்கை பேராதரம் கொள்கின்றாள் என்றும் புலப்பட, “முந்தப் புகுந்து புளகமுடன் மூடிக் குளிர” என்று மொழிகின்றாள். காதல் வேட்கை மீதூர்தலின் கண்ணீர் சொரிந்த வண்ணம் இருப்பது தோன்ற “கண்டலது கந்தக் குழல்வாய்ப் பெண்ணே நான் கண்ணீர் ஒழியக் காணேன்” என்று கூறுகிறாள். (7)
|