1591. தென்னஞ் சோலை வளர்ஒற்றி
யூர்வாழ் செல்வத் தியாகர்அவர்
பின்னுஞ் சடைமேல் பிறைவிளங்கிப்
பிறங்கா நிற்க வரும்பவனி
மன்னுங் கரங்கள் தலைகுவித்து
வணங்கி வாழ்த்திக் கண்டலது
துன்னுந் துவர்வாய்ப் பெண்ணேநான்
சோறெள் ளளவும் உண்ணேனே.
உரை: சிவப்பு நிறம் பொருந்திய வாயையுடைய தோழி, தென்னை மரங்கள் நிறைந்த சோலை சூழ்ந்த திருவொற்றியூரில் எழுந்தருளுகின்ற செல்வத் தியாகப் பெருமான், பின்னிய தமது சடைமேல் பிறை ஒளி விட்டு மேம்பட எழுந்தருளும் திருவுலாவைக் கைகளைத் தலைமேல் கூப்பி வணங்கி, வாயார வாழ்த்தி என் கண்களால் கண்டாலன்றிச் சிறிதளவும் சோறு உட்கொள்ளேன். எ.று.
துன்னுதல் - பொருந்துதல். இந்நாளில் போல வடலூர் வள்ளலார் காலத்திலும் திருவொற்றியூர் தென்னை மரங்களால் சிறப்புற்றிருந்தமையின், “தென்னஞ் சோலை வளர் ஒற்றியூர்” எனச் சிறப்பிக்கின்றார். தேயும் இயல்புடைய பிறையைச் சடையில் சிவபெருமான் சூடிக் கொண்டதால் ஒளி மிக்குத் திகழ்தலின் “சடை மேல் பிறை விளங்கிப் பிறங்க” எனப் புகழ்கின்றார். 'மன்னும்' என்னுமிடத்து மன், உம் அசை நிலை. உலாவரும் பெருமானைக் காணுமிடத்து கைகள் தலைமேல் குவிவதும், உவகையால் உடல் பூரிப்பதும் மெய்யன்பர்க்கு இயல்பாதலின் “கரங்கள் தலைகுவித்து வணங்கி வாழ்த்தி” என்று சொல்லுகின்றார். திருவுலாக் காண்பதிலுள்ள காதல் மிகுதியால் “கண்டலது துன்னும் துவர்வாய்ப் பெண்ணே, நான் சோறு எள்ளளவும் உண்ணேன்” என உரைக்கின்றாள். (8)
|