1592. சிந்தா குலந்தீர்த் தருள்ஒற்றி
யூர்வாழ் செல்வத் தியாகர்அவர்
வந்தார் கண்டார் அவர்மனத்தை
வாங்கிப் போக வரும்பவனி
நந்தா மகிழ்வு தலைசிறப்ப
நாடி ஓடிக் கண்டலது
பந்தார் மலர்க்கைப் பெண்ணேநான்
பாடல் ஆடல் பயிலேனே.
உரை: பந்தாடும் மலர்க் கைகளை யுடைய தோழி, மனக்கவலையைப் போக்கி அருள் புரியும் செல்வத் தியாகப் பெருமான் தன்னை நோக்கி வருபவரும் தன்னைக் காண்பவருமாகிய பலருடைய மனங்களைக் கவரும் அழகிய திருவுலாவைக் குறையாத மகிழ்ச்சி மிகுதியுற நாடியோடிக் கண்களாற் கண்டாலன்றி நான் பாடல் ஆடல்களை மேற்கொள்ளேன், காண். எ.று.
மூங்கில் அகணியாற் பின்னப்பட்டு உள்ளே பஞ்சுத் துய்யினைப் பெய்து மெல்லிய துணியாற் போர்த்துத் தைக்கப்படுவது மகளிராடும் பந்து. பந்து, கழங்கு முதலியன கொண்டு இளமகளிர் ஆடுவது பற்றிப் “பந்தார் மலர்க்கைப் பெண்ணே” என்று தோழியைக் குறிக்கின்றாள். சிந்தா குலம் - மனக்கவலை. தன்னைப் பரவுவோர் மனக்கவலையை மாற்றி இன்னருள் புரிவது இறைவன் செயலாதலால், “சிந்தா குலம் தீர்த்தருள் ஒற்றியூர் வாழ் செல்வத் தியாகர்” என்று தெரிவிக்கின்றாள். இன்ப அருள் வேண்டித் திருமுன் வரும் அன்பர்களை “வந்தார்” எனவும், அவன் திருவுருவைக் கண்டு இன்புறும் நல்லவர்களைக் “கண்டார்” எனவும் இயம்புகிறாள். திருவுலாப் பொலிவு கண்டு இன்புறுபவர் உலாக் கண்ட பின்னரும் அதனையே நினைந்தும் பேசியும் இன்புறுதலால், “மனத்தை வாங்கிப் போக வரும் பவனி” என்று புகழ்கின்றாள். நந்தா மகிழ்வு - குன்றாத மனமகிழ்ச்சி. தலை சிறத்தல் - மிகுதல். நாடல் - (ஈண்டு) உலாவரும் இடம் அறிதல். 'ஓடுதல்', பவனி காணும் வேட்கை மிகுதி புலப்பட நின்றது. தோழியர் கூட்டம் விளையாட்டின் மேலதாகலின், “நான் பாடல் ஆடல் பயிலேன்” என வுரைக்கின்றாள்( (9)
|