85. வியப்பு மொழி

நற்றாய் நயத்தல் - திருவொற்றியூர்

    அஃதாவது, அல்லும் பகலும் திருவொற்றியூர்த் தியாகப் பெருமான் திருவருளின்பத்தில் திளைத்து மகிழும் பெருந்திணைத் தலைவியின் உள்ளக் களிப்பையும் மெய்த் தளிர்ப்பையும் கண்டு இன்புற்ற நற்றாய் மனம் மகிழ்ந்து தன் மகளது நலம் பாராட்டி வியந்துரைப்பதாம். காதலன்பாற் கூடி மகிழ்வார் பெறும் மெய்ப்பாடனைத்தும் மகள்பால் தோன்றக் கண்ட தான் வியப்பு மேலிட்டு மகளோடு உவந்து உரையாடுகின்றாள்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1594.

     மாதர் மணியே மகளேநீ
          வாய்த்த தவந்தான் யாதறியேன்
     தேவர் அனந்தர் மால்அனந்தர்
          மேவி வணங்கக் காண்பரியார்
     நாதர் நடன நாயகனார்
          நல்லோர் உளத்துள் நண்ணுகின்றோர்
     கோதர் அறியாத் தியாகர்தமைக்
          கூடி உடலம் குளிர்ந்தனையே.

உரை:

      மகளிர்க்கு முடிமணியாகிய மகளே, நீ செய்து பயன் கொண்ட தவம் யாதோ, அறிகிலேன்; எண்ணிறந்த பிரமர்களும் நாராயணர்களும் விரும்பிக் காண்பதற்கு அருமையுடையவரும், தலைவரும், ஆடல் வல்ல நாயகரும், நன்மனம் கொண்ட சான்றோர் உள்ளத்தில் எழுந்தருள்பவரும், குற்றமிக்கோரால் அறியப் படாதவருமான தியாகப் பெருமான் திருவருளைப் பெற்று மெய் குளிர்ப்படைந்தாயாகலான். எ.று.

     உடலம் குளிர்ந்தனையாகலான், வாய்த்த தவம் தான் யாது, அறியேன் என இயையும். உலகியலின்பங்களைக் காதலித் தொழுகும் மகளிர் போலாது சிவபெருமான் திருவருட் கூட்டத்தைக் காதலிப்பது பற்றி, “மாதர் மணியே” என மகளை வியந்துரைக்கின்றாள், நற்றாய். நற்றாய் - பெற்ற தாய். வாய்த்த தவம் - செய்து பயன் விளைத்த தவம். அனந்தர் - எண்ணிறந்தவர். வேதர் - பிரமர்கள். “நூறுகோடி பிரமர்கள் நுங்கினார், ஆறு கோடி நாராயணர் அங்ஙனே, ஏறு கங்கை மணலெண்ணில் இந்திரர் ஈறிலாதவ னீச னொருவனே” எனத் திருநாவுக்கரசர் உரைப்பபது காண்க. பிரமரும் நாராயணரும் பிறரும் பிறந்திறந்து மறைந்த சிறுமை யுடையராதலால், அஃது இல்லாத சிவனைக் காணாராயினமை பற்றிக் “காண்பரியார்” எனக் கூறுகின்றாள். தத்துவ தாத்துவிகங்கட்குத் தலைவனாதலால், “நாதர்” எனச் சிவனைக் குறிக்கின்றாள். நடன நாயகன் - ஆடற் கலைக்கு அரசன். ஞானமுடைய சான்றோர் திருவுள்ளத்தைக் கோயிலாகக் கொண்டவனாதலால். “நல்லோர் உளத்துள் நண்ணுகின்றோர்” எனப் புகல்கின்றாள். செய்யுளாகலின், ஆ, ஓவாயிற்று. கோதர் - குற்றமுடையவர். வேட்கை மிகுதியால் வெம்மையுற்று மெலிந்த வுடல் திருவருளின்ப நுகர்வால் தளிர்ப்பது கண்டு உவகை மிகுகின்றாளாகலின், “தியாகர்தமைக் கூடி யுடலம் குளிர்ந்தனையே” என்று சொல்லி இன்புறுகின்றாள்.

     இதனால், திருவருள் இன்ப நுகர்வால் மெய் வெம்மை தணிந்து உயிர் தளிர்ப்பது கண்டு நற்றாய் வியந்து பாராட்டியவாறாம்.

     (1)