1595. திருவில் தோன்றும் மகளேநீ
செய்த தவந்தான் யார்அறிவார்
மருவில் தோன்றும் கொன்றையந்தார்
மார்பர் ஒற்றி மாநகரார்
கருவில் தோன்றும் எங்கள்உயிர்
காக்க நினைத்த கருணையினார்
குருவிற் றோன்றும் தியாகர்தமைக்
கூடி உடலம் குளிர்ந்தனையே.
உரை: திருமகளைப் போல விளங்கும் என் மகளே, மணம் கமழும் கொன்றை மாலை யணிந்த மார்பை யுடைவரும், ஒற்றி மாநகரை யுடையவரும், மக்கள் கருவில் தோன்றுகின்ற எங்கள் உயிரைக் காத்தற்குத் திருவுளம் கொண்டருளும் அருளாளரும், ஞான குருவாய்ப் போந்தருளும் தியாகப் பெருமான் ஆவர், அவர் திருவருளிற் கலந்து உடல் குளிர்ந்தாயாகலின் நீ செய்த தவத்தின் நலத்தை யாவர் அறிகுவர். எ.று.
அழகு மிக்க மகளிர்க்குத் திருமகளை உவமம் செய்யும் மரபு பற்றித் “திருவில் தோன்றும் மகளே” என்று கூறுகின்றாள். மரு - நறுமணம். கொன்றையந்தார் - கொன்றை மாலை. அம்முச் சாரியை அல்வழிக்கண் வந்தது. தாய் வயிற்றில் பிறக்கும் இயல்பு பற்றி, “கருவில் தோன்றும் எங்கள் உயிர்” என்று உரைக்கின்றாள். உயிரைப் பிணித்திருக்கும் மலம் கெடுதற் பொருட்டு உடல் கருவி யுலகு நுகர்வுகளைப் படைத்தளிக்கும் பேரருளை யுடையனாதலின், சிவபெருமானை, “எங்களுயிர் காக்க நினைத்த கருணையினார்” என்றும், பக்குவமுற்ற மக்களுயிர்க்கு அருட் குருவாய் எழுந்தருளி ஞானம் வழங்குபவனாதலின், “குருவில் தோன்றும் தியாகர்” என்றும் இயம்புகின்றாள். (2)
|