1596.

     என்னா ருயிர்போல் மகளேநீ
          என்ன தவந்தான் இயற்றினையோ
     பொன்னார் புயனும் மலரோனும்
          போற்றி வணங்கும் பொற்பதத்தார்
     தென்னார் ஒற்றித் திருநகரார்
          தியாகர் எனும்ஓர் திருப்பெயரார்
     கொன்னார் சூலப் படையவரைக்
          கூடி உடலம் குளிர்ந்தனையே.

உரை:

      திருவீற்றிருக்கும் தோளையுடைய திருமாலும் மலரின்கண் இருக்கும் பிரமனும் துதித்து வணங்கும் அழகிய திருவடியை யுடையவரும், அழகிய ஒற்றி நகரை யுடைய தியாகரென்னும் சிறந்த பெயரை யுடையவரும், அச்சம் பொருந்திய சூலப்படையை யுடையவருமான சிவபிரானது திருவருளிற் கலந்து மெய் குளிர்ந்தாயாகலின், என்னுடைய அரிய உயிர் போன்ற மகளே, நீ எத்தகைய தவம் செய்தாயோ, அறியேன். எ.று.

     ஒருவர்க்கு உயிர்போல் இனியது வேறில்லை யாகலின் தன் மகளை “என்னாருயிர் போல் மகளே” என வுரைக்கின்றாள். திருவருளின்பத்தினும் பேறு வேறின்மையால், “என்ன தவந்தான் இயற்றினையோ” என வியக்கின்றாள். பொன், ஈண்டு வெற்றித் திரு. தாமரை மலரில் இருந்தளுவது பற்றிப் பிரமன், “மலரோன்” எனப்படுகின்றான். போற்றுதல் - துதித்தல். பொற் பதம் - அழகிய திருவடி; பொன்னிறம் கொண்ட திருவடி எனினும் அமையும். தென் - அழகு. திருவொற்றியூரிற் சிவபெருமானைத் தியாகர் எனப் பெயர் குறித்து வணங்குபவாகலின், “தியாகரெனும் ஓர் திருப்பெயரார்” என்று கூறுகிறாள். கொன் - அச்சம். சூலப்படையை, மூவிலைவேல் என்பர்.

     (3)