1597. சேலை நிகர்கண் மகளேநீ
செய்த தவந்தான் செப்பரிதால்
மாலை அயனை வானவரை
வருத்தும் படிக்கு மதித்தெழுந்த
வேலை விடத்தை மிடற்றணிந்தார்
வீட்டு நெறியாம் அரசியற்செங்
கோலை அளித்தார் அவர்தம்மைக்
கூடி உடலம் குளிர்ந்தனையே.
உரை: சேல் மீனை யொக்கும் கண்களையுடைய மகளே, திருமால் பிரமன் தேவர்கள் முதலியோர்களை வருத்தும் குறிப்புடன் தோன்றிய கடல்விடத்தைக் கழுத்திற் கொண்டவரும், வீட்டு நெறியாகிய சிவஞான நெறி முறையால் உலகு புரந்தருளுபவருமான தியாகரது திருவருளிற் கலந்து மெய் குளிர்ப்பெய்தினையாகலின், நீ செய்த தவத்தின் சிறப்பு யார்க்கும் சொல்லவொண்ணாத நலமுடையது, காண். எ.று.
சேல் - கயல், கெண்டை முதலிய மீன் வகையுள் ஒன்று. கடலைக் கடைந்த போதெழுந்த விடம் சூழ விருந்து கடைந்த திருமால் முதலிய தேவர்களை அச்சுறுத்தினமையின், “மாலை யயனை வானவரை வருத்தும் படிக்கு மதித்தெழுந்த வேலை விடம்” என விளம்புகிறார். வேலை - கடல். மதித்தெழுந்த என்பதனை, மதிப்ப எழுந்த எனப் பிரித்து, மத்திட்டுக் கடைய எழுந்த எனப் பொருள் கோடலும் ஒன்று. பிறவாப் பெரு நெறியை “வீட்டு நெறி” என்பார். அந்நெறி சிவஞான வொழுக்கங்களால் உண்டாவதாகலின், அவற்றைப் படைத்து முறை செய்து உயிர்கட்கருளும் சிவனது அருட்செயலை, “வீட்டு நெறியாம் அரசியற் செங்கோல்” என்று சிறப்பிக்கின்றார். (4)
|