1598.

     தேனேர் குதலை மகளேநீ
          செய்த தவந்தான் எத்தவமோ
     மானேர் கரத்தார் மழவிடைமேல்
          வருவார் மருவார் கொன்றையினார்
     பானேர் நீற்றர் பசுபதியார்
          பவள வண்ணர் பல்சடைமேல்
     கோனேர் பிறையார் அவர்தம்மைக்
          கூடி உடலம் குளிர்ந்தனையே.

உரை:

      தேன் போல் இனிய சொற்களைப் பேசும் மகளே, மானேந்தும் கையையுடையவரும், இளமை பொருந்திய எருதின்மேல் வருபவரும், மணம் கமழும் கொன்றை மாலையணிபவரும், பால்போன்ற திருநீற்றையணிபவரும், பசுபதியானவரும், பவளம் போன்ற நிறமுடையவரும், பலவாகிய சடை முடியில் விற்போன்ற பிறையையுடையவருமான சிவபிரானது திருவருளிற் கலந்து மெய்குளிர்ப் பெய்தினாயாகலின், நீ செய்த தவம் எத்தன்மையது என வியப்பேன். எ.று.

     குதலை - இளமகளிர் பேசும் இன்மொழி. திருவருள் இன்பப் பேற்றுக்குரிய உயர் தவத்தைப் பாராட்டுதற்கு “நீ செய்த தவந்தான் எத்தவமோ” எனக் கூறுகிறாள். மழ: இளமையை யுணர்த்தும் சொல். மரு - நறுமணம். “தேனினுமினியர் பாலன நீற்றர்” என ஞானசம்பந்தர் கூறுவர். பசுபதி - தத்துவ தாத்துவிகங்களாற் பிணிப்புண்டிருக்கும் ஆன்மாக்கட்குத் தலைவர். வண்ணர் - நிறமுடையவர். புரிபுரியாய்த் திரண்ட சடைகளின் பன்மை விளங்க “பல்சடை” எனப் பகர்கின்றார். கோனேர் பிறை - வில்லைப் போன்ற பிறை. அம்பைக் குறிக்கும் கோல் என்பது, ஆகு பெயராய் வில்லுக்காயிற்று. திருவருளின்ப நுகர்வால் மெய் தளிர்த்து வனப்பு மிகுதலின், “உடலம் குளிர்ந்தனையே” என வுரைக்கின்றாள்.

     (5)