1599. வில்லார் நுதலாய் மகளேநீ
மேலை நாட்செய் தவம்எதுவோ
கல்லார் உள்ளம் கலவாதார்
காமன் எரியக் கண்விழித்தார்
வில்லார் விசையற் கருள்புரிந்தார்
விளங்கும் ஒற்றி மேவிநின்றார்
கொல்லா நெறியார் அவர்தம்மைக்
கூடி உடலம் குளிர்ந்தனையே.
உரை: வில்லைப் போன்ற நெற்றியையுடைய மகளே, கல்லாதவர் நெஞ்சில் கலந்து நில்லாதவரும், காமவேள் எரிந்து கெட நெற்றிக் கண்ணால் நோக்கியவரும், வில் வீரனாகிய அருச்சுனனுக்குப் படை யுதவியவரும், செல்வத்தால் விளக்கமுறும் திருவொற்றியூரின்கண் எழுந்தருள்பவரும், கொல்லா நெறியை யுடையவருமான சிவபெருமான் திருவருளின்ப நுகர்வால் மெய் தளிர்க்கின்றாயாகலான், நீ முற்பிறப்பிற் செய்த தவம் இன்னதென அறியேன். எ.று.
“கல்லார் நெஞ்சில் நில்லான் ஈசன்” என்று சான்றோர் கூறுதலால், “கல்லாருள்ளம் கலவாதார்” எனவுரைக்கின்றாள். நெற்றிக் கண்ணைத் திறந்து நோக்கிக் காமவேளை எரித்த வரலாறு விளங்க, “காமனெரியக் கண் விழித்தார்” என்று கூறுகின்றாள். பாண்டவரில் அருச்சுனன் விற்போரில் வல்லுநன் என்பதனால், “வில்லார் விசய” னென்றும், பாசுபதம் என்ற படையருளிய நலத்தை “விசயற்கருள் புரிந்தா” ரென்றும் இயம்புகின்றாள். கொல்லாநெறி சிவநெறியின் சீர்த்த கொள்கையாதலின், சிவபிரானைக் “கொல்லா நெறியார்” என்று குறிக்கின்றாள். திருவருள் இன்ப நுகர்வால் மகள் மேனியின் கதிர்ப்புக் கண்டு மகிழ்கின்றமை புலப்பட, “உடலம் குளிர்ந்தனையே” என்று கூறுகிறாள். (6)
|