16.

    சடமாகி யின்பந் தராதாகி மிகுபெருஞ்
        சஞ்சலா காரமாகிச்
        சற்றாகி வெளிமயல் பற்றாகி யோடுமித்
        தன்மை பெறு செல்வமந்தோ
    விடமாகி யொரு கபட நடமாகி யாற்றிடை
        விரைந்து செலும் வெள்ளமாகி
        வேலை யயாகி யாங்கார வலையாகி முதிர்
        வேனிலுறு மேக மாகிக்
    கடமாய சகடமுறு காலாகி நீடுவாய்க்
        காலோடு நீராகியே
        கற்பிலா மகளிர் போற் பொற்பிலா துழலுமிது
        கருதாத வகை யருளுவாய்
    தடமேவு சென்னையிற் கந்த கோட்டத்துள் வளர்
        தலமோங்கு கந்த வேளே
        தண்முகத் துய்ய மணி யுண்முகச் சைவமணி
        சண்முகத் தெய்வ மணியே.

உரை:

     பெருமை பொருந்திய சென்னைக் கந்த கோட்டத்துள் உள்ள கோயிலில் எழுந்தருளும் கந்தசாமிக் கடவுளே, தண்ணிய ஒளியுடைய தூய மணிகளுட் சிறந்த சைவமணியாய் ஆறு முகங்களைக் கொண்ட தெய்வமாகிய மணியே, சடப் பொருளாய் இன்பம் தருவதன்றாய் மிக்க பெரும் மனக் கலக்கம் தரும் வடிவமாய்ச் சிறிதாய் வெளியாரை மயக்குவதிற் பற்றுக் கோடாய் நிலையின்றி ஓடுவதாகிய இத்தன்மையையுடைய செல்வமோ, ஐயோ, தன்னை யுடையார்க்கு விடமாய், பிறர் முன் வஞ்ச நாடக மாடுதற் கேதுவாய், காட்டாற்றில் விரைந்தோடும் நீர்ப்பெருக்குப் போல்வதாய், கடலில் அலை யொப்பதாய், ஆங்காரமாகிய வலையாய், முதுவேனிற் காலத்துவான மேகம் போல்வதாய்க் குடத்தை நடுவேயுடைய சக்கரத்தின் கால் நிகர்வதாய் நெடிய வாய்க்கால் வழியோடும் நீர் ஒப்பதாய், கற்பிலாத மகளிர் மனம் நிலையில்லாமல் காசுடையார் யாவர் மேலும் பரப்பது போல் உழலுகின்ற இச்செல்வத்தை விரும்பாத வண்ணம் எனக்கு அருள் புரிக, எ. று.

     தட - பெருமை. சடப் பொருள் - அழியும் பொருள். சேதனமாகிய அழிவிலா அறிவுடைய உயிர்ப்பொருள் போல இன்பம் தருவது அன்மையின், “இன்பம் தராதாகி” என்றும், எண்ணிக்கையால் மிக்குப் பெருகுமிடத்துத் தன்னையுடையாரைப் பற்பல அச்ச நினைவுகட் கிரையாக்கி வருத்துவதாகலின், “மிகு பெருஞ் சஞ்சலாகாரமாகி” என்றும் கூறுகிறார். பொன்னாகிய செல்வம் உண்ணும் உணவாகவோ உடுக்கும் உடையாகவோ மனைவி மக்களாகவோ இன்பம் தருவது அன்மை ராமதாஸ் என்னும் வேந்தன் கதையாலும், செல்வம் சஞ்சலாகாரமாவதை, ஈட்டலும் காத்தலும் பிறவும் துன்பம் பயத்தலினாலும் அறியலாம். “ஈட்டலும் துன்பமற் றீட்டிய வொண்பொருளைக் காத்தலு மாங்கே கடுந்துன்பம் - காத்த, குறைபடில் துன்பம் கெடின் துன்பம் துன்பக், குறைபதி மற்றைப் பொருள்” (280) என்னும் நாலடியாராலும் அறியலாம். பிறர் செல்வங்கண்டவிடத்துத் தமது சிறிது என்னும் ஆராமை பயப்பது பற்றிச் “சற்றாகி” என்றும், தமது செல்வமுடைமை அறியாமைப் பொருட்டுப் பிறரைத் தம் சொல்லாலும் வேடத்தாலும் மயக்குதலில் பற்றுடைய ராக்குதலால், “வெளிமயல் பற்றாகி” என்றும், யாவரிடத்தும் நில்லாது ஓடுதலால் “ஓடும் இத்தன்மை பெறு செல்வம்” என்றும் கூறுகின்றார். இதுகாறும் செல்வத்தின் தன்மை பேசிய வள்ளற் பெருமான், தன் பெயருக்கேற்ற அதன் நிலையாமையைப் பல வுவமைகளால் விளக்குகின்றார். செல்வம் தன்னை யுடையார்க்குக் கள்வர் முதலியோராற் கேடு விளைவிப்பதால் “விடமாகி” என்றும், உள்ளதை மறைத்து இல்லார் போல் நடிக்கச் செய்வதால், “ஒரு கபட நடமாகி” என்றும் இயம்புகிறார். நிலையாது விரைந்து நீங்கும் செல்வத்தின் செயலை யுணர்த்தற்கு “ஆற்றிடை விரைந்து செல்லும் வெள்ளமாகி” என்றும், ஒருகால் மிகுவதும் ஒருகால் குறைவது மாகிய இயல்புணர்த்தற்கு “வேலை அலையாகி” என்றும் கூறுகிறார். செல்வ முடையா ரிடத்தில் தன் முனைப்பும் ஆங்காரமும் காணப்படுதலால் “ஆங்கார வலையாகி” என்றும், தேய்ந்து கெடுமிடத்துச் சிதறிச் சென்று மாய்கின்றமை அறிவித்தற்கு, “முதிர்வேனில் உறுமேக மாகி” என்றும் உரைக்கின்றார். கார்ப் பருவத்தில் தண்ணிய மழை பொழிந்த முகில் வேனிற் பருவத்தில் தெற்கு நோக்கிச் சென்று பஞ்சித் துய் போல் சென்று அற்றொழிதலின், முதிர் வேனிலையெடுத்து மொழிகின்றார். “இன்குரல் எழிலி தென்புலமருங்கிற் சென்றற் றாங்கு” (நற். 153) என்றும், “பெய்து புலந்திறந்த பொங்கல் வெண்மழை, எஃகுறு பஞ்சித் துய்ப்பட்டன்ன” (அகம். 217) என்றும் சான்றோர் கூறுதலால் அறியலாம். சக்கரத்தின் நடுவே உள்ளாழி பெற்றுக் கால்கள் நோக்கப் படுமது குடமெனவும் கடமெனவும் வழங்குதலின், “கடமாய சகடமுறு காலாகி” என்றும், சகடக்கால் உருண்டோடுவது போலச் செல்வமும் மாறி மாறி வருவதும் செல்வதுமாதலால் “சகடமுறு காலாகி” என்றும் கூறுகிறார். “செல்வம் சகடக்கால் போலவரும்” என்பது நாலடியார். வாய்க்கால் வழியோடும் நீர் வேண்டும் நெல்லுக்கும் வேண்டாத புல்லுக்கும் பாய்வது போல் நல்லார் பொல்லார் என்ற இரு திறத்தார்க்கும் பயன்படுவது பற்றி, “நீடு வாய்க்கா லோடும் நீராகி” என வுரைக்கின்றார். பொருளுடையோர்யாவராயினும் வரையறை யின்றிக் கூடும் பொருட் பெண்டிர் போல நல்வினை யுடையார்பாற் செல்வது பற்றிச் செல்வத்தைக் “கற்பிலா மகளிர் போல் பொற்பிலாது உழலும் இது” என்று சுட்டிக் காட்டுகிறார். “புண்ணிய முலந்தபின் பொருளிலார்களைக் கண்ணிலள் நீங்கிடும் கணிகை வண்ணமே” (சூளா. முத்தி 15) எனத் தோலா மொழித் தேவர் கூறுவர். இத்தகைய தன்மைத்தாய செல்வம், ஒருநெறிய மனம் வைத்து உய்திபெற முயல்வார்க்கு ஆகாமையால், இப்பொருட் செல்வத்தைக் கருதுவதை விடுத்து உனது அருட் செல்வம் பெறற்கு அருள் புரிக என்பார், “இது கருதாத வகை அருளுவாய்” என வேண்டுகிறார்.

     இதனால், செல்வத்தின் நிலையாமையையும் நலம் தீங்கு நாடாது சென்றடையும் தன்மையையும் கூறி அதனை நாடாமல் அருட் செல்வமே நினைந்து பெற அருளை வேண்டியவாறாம்.

     (16)