160.

    வள்ள லுன்னடி வணங்கிப் போற்ற வென்
    உள்ள மென்வசத் துற்ற தில்லையால்
    எள்ள லையவோ ஏழை என்செய்கேன்
    தள்ளரும் பொழில் தணிகை வெற்பனே.

உரை:

     விலக்குதற் கரிய எழிலுடைய பொழில் நிறைந்த தணிகை மலையை யுடையவனே, வள்ளலாகிய உன்னுடைய திருவடியை வணங்கி வழிபடுதற்கு என்னுடைய உள்ளம் என் வசத்தில் இல்லா தொழிதலால், ஐயனே, என்னை இகழ்ந்து விலக்க வேண்டா; ஏழையாகிய யான் என்ன செய்வேன், எ. று.

     இருள் சூழந்து இனிது உலவுதற் காகாமை பற்றி விலக்கப்படுவதன்று என்றற்குத் “தள்ளரும் பொழில்” என்று கூறுகிறார். தனது இன்னருளை வரையாது வழங்குபவ னென்றற்கு “வள்ளல்” எனப் புகழ்கின்றார். மனம் ஒருப்படா விடத்து வணக்கமும் வழிபாடும் பயனிலவாய் ஒழிதலின், “உன்னடி வணங்கிப் போற்ற என் உள்ளம் என் வசத்தில்லையால்” என்றும், மனத்தைத் தன்வழி நிறுத்தாமை ஒருவற்குக்குற்றமாய் இகழற்பாடு பயத்தலின், “எள்ளல் ஐயவோ” என்றும், நிறையறிவு இல்லாதவன் என்பார், “ஏழை” என்றும், அதனால் ஒன்றும் செய்ய மாட்டாதவனாயினேன் என்பாராய், “என் செய்கேன்” என்றும் இயம்புகின்றார்.

     இதனால், மனம் ஒன்றாமை கூறி அருள் செய்க என வேண்டியவாறாம்.

     (10)