1602. மலைநேர் முலையாய் மகளேநீ
மதிக்கும் தவமே தாற்றினையோ
தலைநேர் அலங்கல் தாழ்சடையார்
சாதி அறியாச் சங்கரனார்
இலைநேர் தலைமூன் றொளிர்படையார்
எல்லாம் உடையார் எருக்கின்மலர்க்
குலைநேர் சடையார் அவர்தம்மைக்
கூடி உடலம் குளிர்ந்தனையே.
உரை: மலை போலும் கொங்கைகளை யுடைய மகளே, தலையிற் கண்ணியும் மாலையும் தாழ்ந்தசையும் முடியை யுடையவரும், சாதி வேறுபாடு காணாத தன்மையுடைய சங்கரனாரும், இலைபோலும் தலையையுடைய சூலப் படையை யுடையவரும், எல்லாம் உடையவரும், எருக்கின் பூக் குலைகளாகிய சடையை யுடையவருமான சிவபெருமான் திருவருளைக் கூடி மெய் தளிர்த்து விளங்குகின்றாயாலின், நீ எண்ணிச் செய்த தவம் யாதோ, அறியேன். எ.று.
பெருமை பற்றி “மலைநேர் முலையாய்” என்று கூறுகிறாள். எண்ணிச் செய்யும் தவமாவது, பயனைக் குறிக்கொண்டு செய்யும் தவம்: தலை நேர் அலங்கல், தலையிற் சூடும் கண்ணியும் மாலையுமாம்; தலைமாலை எனினும் அமையும். அலங்கல் தாழ் சடை - மாலை தாழும் முடி. சாதிப் பகுப்பு, இறைவன் செயலன்மையின், “சாதி யறியாச் சங்கரனார்” என்று இயம்புகிறாள். சங்கரன் - சுகத்தைச் செய்பவன். “இலை நேர் தலை மூன்று ஒளிர்படை” - மூவிலை வேல் எனப்படும் சூலப் படை. சிவனுக்குரிய பூக்களில் எருக்கும் ஒன்றாதலால், “எருக்கின் மலர்குலை நேர்சடையார்” என்கின்றாள். எருக்கம் பூ குலை குலையாய் மலர்தலின், “எருக்கின் மலர்க் குலை” எனச் சிறப்பிக்கின்றார். நேர்தல் - பொருந்துதல். (9)
|