1603.

     மயிலின் இயல்சேர் மகளேநீ
          மகிழ்ந்து புரிந்த தெத்தவமோ
     வெயிலின் இயல்சேர் மேனியினார்
          வெண்ணீ றுடையார் வெள்விடையார்
     பயிலின் மொழியாள் பாங்குடையார்
          பணைசூழ் ஒற்றிப் பதிஅமர்ந்தார்
     குயிலிற் குலவி அவர்தம்மைக்
          கூடி உடலம் குளிர்ந்தனையே.

உரை:

      மயிலின் சாயலை யுடைய மகளே, மாலை வெயிலின் நிறம் பொருந்திய மேனியை யுடையவரும், வெள்ளிய திருநீறு அணிபவரும், இனிமை பயிலும் சொற்களையுடைய உமாதேவியை ஒருபாகத்தே யுடையவரும், நன்செய் வயல்கள் சூழ்ந்த திருவொற்றியூரில் எழுந்தருள் பவருமான சிவபெருமான் திருவருளைக் குயில்போல் இனிமையுறக் குலவிப் பேசிக் கலந்து மெய் தளிர்ப்புற்றாயாகலின், நீ மனமுவந்து செய்தது எத்தகைய தவமோ, அறியேன். எ.று.

     மகளிரின் மென்மை யியக்கத்துக்கு மயிலின் சாயலை எடுத்தோதுபவாகலின், “மயிலின் இயல்சேர் மகளே” எனக் கூறுகின்றாள். வெயில் - ஈண்டுப் பொன்னிற அந்திமாலை வெயில் மேற்று. சிவபிரான் ஊர்தி வெண்மையான எருதாதலால், “வெள்விடையார்” என விளம்புகிறாள். பயிலின் மொழியாள், இன்மொழி பயில்பவள் என இயையும்; ஈண்டு இஃது உமாதேவியைக் குறிக்கிறது. பணை - நெல் வயல் மிக்க மருதப்பணை, இனிமையுறப் பேசிக் கூடி மகிழ்தலை, “குயிலிற் குலவிக் கூடி யுடலம் குளிர்ந்தனை” என்று கூறுகின்றாள். “உடலம் குளிர்ந்தனையாகலான். மகிழ்ந்து புரிந்தது எத்தவமோ” என வியக்கின்றாள்.

     (10)