1605. மாலே றுடைத்தாங் கொடிஉடையார்
வளஞ்சேர் ஒற்றி மாநகரார்
பாலே றணிநீற் றழகர்அவர்
பாவி யேனைப் பரிந்திலரே
கோலே றுண்ட மதன்கரும்பைக்
குனித்தான் அம்புங் கோத்தனன்காண்
சேலே றுண்கண் என்னடிநான்
செய்வ தொன்றும் தெரிந்திலனே.
உரை: சேல் மீன் போன்ற மை தீட்டிய கண்களையுடைய தோழி, பெரிய எருதெழுதிய கொடியை யுடையவரும், வளம் பொருந்திய திருவொற்றியூரை யுடையவரும், பால் போன்ற திருநீறணிந்த அழகை யுடையவருமான தியாகப்பெருமான், பாவியாகிய என்பாற் பரிவு கொண்டிலர்; காமவேளும் தனது திரண்ட கரும்பு வில்லை வளைத்து மலரம்புகளை என்மேல் எய்கின்றான்; ஒன்றும் செய்வது தெரியாமல் மயங்குகின்றேன். எ.று.
மால் ஏறு - பெரிய எருது; திருமாலாகிய எருது என்றுமாம். நெய்தல் வளமும் மருத வளமும் பொருந்தியதாகலின், திருவொற்றியூரை, “வளஞ்சேர் ஒற்றி மாநகர்” என வுரைக்கின்றாள். வெண்மை நிறம் விளங்கப் “பாலேறணி நீறு” எனவும், அதனைப் பூசும் திருமேனி அழகுறுதலின், “அணிநீற் றழகர்” எனவும் இயம்புகிறாள். பரிந்திலர் - அன்பு கொண்டிலர். கோல் - திரட்சி; கோலேறுண்ட கரும்பு என இயையும். குனித்தல் - வளைத்தல். மை தீட்டிய கண்களை “உண்கண்” என்பர். உண்கண்ணை யுடையவளை “உண்கண்” என வுரைக்கின்றாள். சேல்: மீன் வகையுள் ஒன்று. (2)
|