1606. பொய்யர் உளத்துப் புகுந்தறியார்
போத னொடுமால் காண்பரிதாம்
ஐயர் திருவாழ் ஒற்றிநகர்
அமர்ந்தார் இன்னும் அணைந்திலரே
வைய மடவார் நகைக்கின்றார்
மாரன் கணையால் திகைக்கின்றேன்
செய்ய முகத்தாய் என்னடிநான்
செய்வ தொன்றும் தெரிந்திலனே.
உரை: செவ்விய முகத்தையுடைய தோழி, பொய் பொருந்தியவர் மனத்தின்கண் புகாதவரும், பிரமனும் திருமாலும் காண்பதற் கரியவரும் தலைவரும், திருமகள் உறையும் திருவொற்றியூரை யுடையவருமான தியாகப்பெருமான் இன்னும் என் பக்கல் வந்திலராதலால், உலகத்து இளமகளிர் என்னைப் பார்த்து எள்ளி நகைக்கின்றார்கள்; காமவேள் சொரியும் மலரம்புகளால் அறிவு மயங்குகின்றேன்; என்ன செய்வதென்று தெரிகிலேன். எ.று.
பொய்ம்மை பொருந்திய நினைவு சொற் செயல்களை யுடையவர் பொய்யர்; அவர் நெஞ்சின்கண் உள்ளீடாகிய மெய்ம்மை யின்மையின் மெய்யுருவாகிய சிவபெருமான் எழுந்தருளாராகலின், “பொய்யருளத்துப் புகுந்தறியார்” என்று புகல்கின்றாள். போதன் - பிரமதேவன். ஐ - தலைமை. செல்வம் மிக்கிருத்தலின், “திருவாழ் ஒற்றிநகர்” என்று கூறுகிறாள். தேவ மகளிரை விலக்குதற்கு “வைய மடவார்” என்கின்றாள். மடவார் - இளமகளிர். திகைத்தல் - மயங்குதல். செய்ய முகம் - செவ்வி யமைந்த முகம். (3)
|