1607.

     நந்திப் பரியார் திருஒற்றி
          நாதர் அயன்மால் நாடுகினும்
     சந்திப் பரியார் என்அருமைத்
          தலைவர் இன்னுஞ் சார்ந்திலரே
     அந்திப் பொழுதோ வந்ததினி
          அந்தோ மதியம் அனல்சொரியும்
     சிந்திப் புடையேன் என்னடிநான்
          செய்வ தொன்றும் தெரிந்திலனே.

உரை:

      நந்தியாகிய வூர்தியை யுடையவரும், திருவொற்றியூர்க்குத் தலைவரும், பிரமன் திருமாலாகிய இருவரும் நாடி முயன்றும் காண முடியாதவரும், என்னுடைய அருமைத் தலைவருமாகிய தியாகப் பெருமான் இன்னும் என்பால் வந்திலர்; அந்திமாலைப் பொழுதும் இப்போது வந்துவிட்டது. திங்கள் தோன்றி நிலவாகிய நெருப்பைச் சொரிகிறது; யானும் சிந்தாகுல முறுகின்றேன்; செய்வ தொன்றும் அறியாமல் திகைக்கின்றேன். எ.று.

      நந்தி - எருதாகிய வூர்தி. பரி - விரைந்து செல்லும் ஊர்தி. திருவொற்றியூரை யுடையவராகலின், “திருவொற்றி நாதர்” எனக் கூறுகிறாள். திருமாலும் பிரமனும் முறையே சிவனுடைய திருவடியும் திருமுடியும் காண முயன்று மாட்டாராயினமையின், “அயன்மால் நாடுகினும் சந்திப் பரியார்” என வுரைக்கின்றாள். சந்தித்தல் - காண்டல். அன்பு தொக நிற்றல் விளங்க, “என் அருமைத் தலைவர்” என்று சொல்லுகிறாள். காதல் வேட்கையால் கையறவு படுவார்க்கு மாலைப் பொழுதும் தண்ணிய மதியமும் விரகநோயை மிகுவிப்பனவாதலால், “அந்திப் பொழுதோ வந்ததினி அந்தோ மதியம் அனல் சொரியும்” என அவலிக்கின்றாள். திருவருட் கூட்ட விருப்பு மேலிடலால் நினைவு முற்றும் அதுவே பொருளாக நிகழ்வது பற்றி, “சிந்திப் புடையேன்” எனத் தெரிவிக்கின்றாள். இது சுழற்சி யென்னும் மெய்ப்பாடு.

     (4)