1608. என்ஆ ருயிர்க்கோர் துணையானார்
என்ஆண் டவனார் என்னுடையார்
பொன்னார் ஒற்றி நகர்அமர்ந்தார்
புணர்வான் இன்னும் போந்திலரே
ஒன்னார் எனவே தாயும்எனை
ஒறுத்தாள் நானும் உயிர்பொறுத்தேன்
தென்னார் குழலாய் என்னடிநான்
செய்வ தொன்றும் தெரிந்திலனே.
உரை: அழகு மிக்க கூந்தலை யுடையவளே, எனதரிய உயிர்க்குத் துணையானவரும், என்னை அருளி ஆண்டவரும், என்னைத் தனக்குரிமையாக வுடையவரும், செல்வம் பொருந்திய திருவொற்றியூர்க்கண் அமர்ந்த வருமான தியாகப்பெருமான் கூட்டம் நல்குதற்கு இன்னமும் வந்தாரில்லை; பகை போல நோக்கித் தாயும் என்னை வருத்துகிறாள்; நானும் என் உயிரைத் தாங்கியிருக்கின்றேன்; இந்நிலையில் செய்வதறியாமல் யான் திகைக்கின்றேன், காண். எ.று.
உருவில்லாத உயிரின் உண்மை நிலை கண்டு துணை புரியும் திறம் இறைவற் கல்ல தின்மையால், இறைவனை “என் ஆருயிர்க் கோர் துணையானார்” என்றும், அஃது உய்தி பெறுவது கருதித் தனது பேரருளால் உலகுடல் கருவிகளைப் படைத்தளித் தருளுதலால், “என் ஆண்டவனார்” என்றும், இவ்வாற்றால் உயிரின்பால் இறைவற்குள்ள உரிமை மிக்கிருத்தலால் “என்னுடையார்” என்றும் இயம்புகின்றாள். பொன் - செல்வம், அமர்தல் - விரும்பி யுறைதல். இறைவனது புணரா விரகு புலப்பட, “புணர்வான் இன்னும் போந்திலரே” எனப் புகல்கின்றாள். இற்செறித்தமை பற்றி, “ஒன்னார் எனவே தாயும் எனை ஒறுத்தாள்” என்றும், தனது ஆற்றாமை பற்றி, “நானும் உயிர் பொறுத்தேன்” என்றும் கூறுகிறாள். ஒன்னார் - பகைவர். இன்பமில்லாத போது உயிர் சுமையாகத் தோன்றுதலால், “உயிர் பொறுத்தேன்” என்கின்றாள். (5)
|