1609.

     மாணி உயிர்காத் தந்தகனை
          மறுத்தார் ஒற்றி மாநகரார்
     காணி உடையார் உலகுடையார்
          கனிவாய் இன்னுங் கலந்திலரே
     பேணி வாழாப் பெண்எனவே
          பெண்க ளெல்லாம் பேசுகின்றார்
     சேணின் றிழிந்தாய் என்னடிநான்
          செயவ தொன்றும் தெரிந்திலனே.

உரை:

      வானின்றிழிந்த மங்கை போல்பவளே, மாணியாகிய மார்க்கண்டன் உயிர் காத்தற்கு இயமனைச் செயல் புரியாவாறு தடுத்த வரும், திருவொற்றியூரை யுடையவரும், அவ்வூரையே தனக்குரிய காணியாகவுடையவரும், உலகனைத்தும் தனக்கு உடைமையாகவுடையவருமாகிய சிவபெருமான் மனங் கனிந்து என்பால் இப்பொழுது வந்தாரில்லை; கணவனை நயந்து உடன் வாழாத பெண்ணென என்னை நினைத்து ஏனை மகளிரெல்லாம் எள்ளியுரைக்கின்றார்கள்; இதனால் செய்வது தெரியாமல் நான் திகைக்கின்றேன்; இதனை என்னென்பது? எ.று.

     சேண் - வானுலகம். தேவமகள் போறலின் தோழியைச் “சேணின்றிழிந்தாய்” எனச் சிறப்பிக்கின்றாள். மாணி - வேதியச் சிறுவன்; பிரமசாரியுமாம்; ஈண்டு இஃது மார்க்கண்டன் மேற்று. அந்தகன் - இயமன். வாழ்நாளிறுதியில் உயிர் கொள்வது இயமன் செயல்; அம்முறையில் உயிர் கொள்ளவந்த அந்தகனை அது செய்யாவாறு தடுத்ததுபற்றிச் சிவபெருமானை, “மாணியுயிர் காத்து அந்தகனை மறுத்தார்” எனப் புகல்கின்றாள். திருவொற்றியூரும் அதன் எல்லையில் அடங்கிய நிலமுழுதும் தமக்கேயுடையராதலால், “காணியுடையார்” என்றும், இதனோடு உலகனைத்தையும் உடைமையாகக் கொண்டுள்ளமை விளங்க, “உலகுடையா” ரென்றும் உரைக்கின்றாள். காதலன்பால் உள்ளம் கனிந்து போந்து தன்னைக் கூடி யின்புறுத்தாத கொடுமை கூறுதலுற்றுக் “கனிவாய் இன்னும் கலந்திலர்” எனவுரைக்கின்றாள். மணந்த கணவனோடு கூடி யுடன்வாழாத பெண்களை உலகம் தூற்றுவது இயற்கையாதலால், “பேணி வாழாப் பெண்ணெனவே பெண்களெல்லாம் பேசுகின்றார்” என்று பேதுறுகின்றாள். செய்வது தெரியாமல் திகைத்தற்கு இதுவும் ஒரு காரணமாத தறிக.

     (6)