161.

    வெற்பனே திருத் தணிகை வேலனே
    பொற்பனே திருப் போரி நாதனே
    கற்பமேல் பல காலம் செல்லுமால்
    அற்பனேன் துயர்க்களவு சாற்றவே.

உரை:

     திருத்தணிகை மலையை யுடையவனே, வேற்படையை யுடையவனே, பொன்னிறத்தால் பொலிபவனே, திருப்போரூர்ப் பெருமானே, அற்பனாகிய என் துன்பமெல்லாம் சொல்லுவேனாயின் மிகப்பல கற்ப காலங்கள் வேண்டும், எ. று.

     வெற்பு - மலை. வெற்பன் - மலைகளையுடைய குறிஞ்சி நிலத் தலைவன்; “சேயோன் மேய மைவரை யுலகம்” என்று தொல்காப்பியம் சொல்லுகிறது. பொற்பன்- அழகன்; பொற்பு, பொன் போலும் நிறத்தால் உளதாகும் பொலிவுமாம். போரூர், போரி என வழங்கும். துயர்க்கு அளவு சாற்றக் கற்பக் காலம் பல செல்லும் என இயையும். கற்பம்- பல கோடி ஆண்டுகள். துன்பம் சொல்ல வொண்ணாத அளவு மிகுந்தது என்பது கருத்து.

     இதனால் துன்பம் சொல்லுமளவும் கடந்தது என்று கூறி அருள் செய்க என முறையிட்டவாறு.

     (11)