1610.

     வன்சொற் புகலார் ஓர்உயிரும்
          வருந்த நினையார் மனமகிழ
     இன்சொற் புகல்வார் ஒற்றியுளார்
          என்நா யகனார் வந்திலரே
     புன்சொற் செவிகள் புகத்துயரம்
          பொறுத்து முடியேன் புலம்பிநின்றேன்
     தென்சொற் கிளியே என்னடிநான்
          செய்வ தொன்றும் தெரிந்திலனே.

உரை:

      அழகிய சொற்களைப் பேசும் கிளிபோன்ற தோழி, வன் சொற்களைச் சொல்லாதவரும், ஓருயிருக்கும் வருத்தமுண்டாக எண்ணாதவரும், யாவர் மனமும் உவகையுறப் பேசுபவரும், திருவொற்றியூரை யுடையவரும், எனக்கு நாயகருமாகிய சிவபெருமான் இன்னமும் என்பால் வரவில்லையாகலின், ஏனை மகளிர் பேசும் புல்லியசொற்கள் என் செவியிற் படுதலால் எய்தும் வருத்தத்தை என்னாற் பொறுக்க முடியவில்லை; தனிமையால் துயருகின்றேன்; இதனால் செய்வது தெரியாமல் திகைக்கின்றேன், காண். எ.று.

     வன்சொல் - இனிமை யில்லாத சொற்கள். வன்சொற்களைக் கேட்டு உலகவர் மகிழ மாட்டாராகலின், “வன்சொல் புகலார்” எனவும், பிறவுயிர்கள் வருந்தக் காண்பதும் அவற்றிற்கு வருத்தம் செய்வதும் நற்பண்புடையோர் செயலன்மையின், “ஓருயிரும் வருந்த நினையார்” எனவும், எல்லோர்க்கும் இன்பமே செய்தலின், “மனமகிழ இன்சொற் புகல்வார்” எனவும் எடுத்தோதுகின்றாள். இவ்வளவும் தலைவன் பாலுள்ள காதலன்பால் நலம் பாராட்டியதாம். யாவர்க்கும் தலைவராயினும் தனக்குள்ள உறவு புலப்பட, “என் நாயகனார்” என வுரைக்கின்றாள். இறைவனது வராமை நெஞ்சின்கண் நின்று வருத்துதலால் “வந்திலரே” என மொழிகின்றாள். ஏனை மகளிர் இகழ்ந்து பேசுவது, புன்சொற்கள் எனக் குறிக்கப்படுகின்றன. புன்சொற்களைப் பன்முறையும் கேட்டு ஆற்றாமையுறுவது தோன்றப் “பொறுத்து முடியேன்” என்றும், யாவரிடமும் உரையாடாமல் வருந்துமாறு விளங்க, “புலம்பி நின்றேன்” என்றும் இயம்புகின்றாள். புலம்பு - தனிமை. தென் சொல் - அழகிய சொல்; இனிய தமிழ் எனினு மமையும்.

     (7)