1611.

     எட்டிக் கனியும் மாங்கனிபோல்
          இனிக்க உரைக்கும் இன்சொலினார்
     தட்டிற் பொருந்தார் ஒற்றியில்வாழ்
          தலைவர் இன்னும் சார்ந்திலரே
     மட்டிற் பொலியும் மலர்க்கணைசெல்
          வழியே பழிசெல் வழிஅன்றோ
     தெட்டிற் பொலியும் விழியாய்நான்
          செய்வ தொன்றும் தெரிந்திலனே.

உரை:

      தெளிவாற் சிறப்புறும் கண்களையுடைய தோழி, எட்டிக் கனிபோற் செவிகைக்கும் பொருளையும் மாம்பழம்போல் இனிக்குமாறு பேசும் இனிய சொற்களையுடையவரும், குறையுடைமை காணப் பொறாதவரும், திருவொற்றியூரில் வாழ்பவருமாகிய சிவபிரானாகிய தலைவர், இன்னமும் போந்து என்னையடைந்திலராதலால், தேன் மிக்கு விளங்கும் காமன் மலரம்புகள் தாக்குமிடமெல்லாம் பழி விளைவிப்பனவன்றோ; நான் செய்வது தெரியாமல் திகைக்கின்றேன். எ.று.

     தெட்டு - தெளிவு. கள்ளமில்லாத பார்வையுடைமை பற்றி, “தெட்டிற் பொலியும் விழியாய்” என வுரைக்கின்றாள். கைப்புச்சுவைக்கு எல்லையாவது, எட்டிக் கனி, பொருளாற் சுவை கொடிதாயினும் சொல்லும் சொற்சுவை இனிமையுறக் கூறுதல் அறமாதலின், “எட்டிக் கனியும் மாங்கனிபோல் இனிக்க வுரைக்கும் இன்சொலினார்” என்று கூறுகிறாள். தட்டு - குறைபாடு. குறையுடையார் துயர் காணப் பொறாத பேரருளாளனாதலின், சிவனைத் “தட்டிற் பொருந்தார்” என வுரைக்கின்றாள். உரிய பொழுதில் வருவார் போன்று உரையாடினமை புலப்பட, “இன்னும் சார்ந்திலரே” என ஏங்குகின்றாள். மட்டு - தேன். காமனது மலரம்பு இச்சையை எழுப்பி மேனி நலத்தை வேறுபடுத்திக் கண்டார் பழிக்கச் செய்தலின், “மலர்க்கணை செல்வழியே பழி செல்வழி” என்று பகர்கின்றாள். வேட்கை மிகுதியால் அறிவு மயங்குதலின், “செய்வ தொன்றும் தெரிந்திலனே” எனத் தெரிவிக்கின்றாள்.

     (8)