1612. காலை மலர்ந்த கமலம்போல்
கவின்செய் முகத்தார் கண்நுதலார்
சோலை மலர்ந்த ஒற்றியினார்
சோகந் தீர்க்க வந்திலரே
மாலை மலர்ந்த மையல்நோய்
வசந்தம் அதனால் வளர்ந்ததையோ
சேலை விழியாய் என்னடிநான்
செய்வ தொன்றும் தெரிந்திலனே.
உரை: சேல் மீன் போன்ற கண்களையுடைய தோழி, நாட் காலையில் மாலையில் மலர்ந்த தாமரைபோல் அழகுறும் முகத்தையும், கண் பொருந்திய நெற்றியையு முடையவரும், சோலைகள் பூத்துப் பொலியும் திருவொற்றியூரில் எழுந்தருள்பவருமாகிய சிவபெருமான், எனது காதற் சோகம் தீர என்பால் வரவில்லையாதலால், மாலையில் மிக்குறும் காம நோய், வேனிற் பருவ வரவில் ஐயோ பெருகிவிட்டதாகலான், செய்வது காணாமல் வருந்துகிறேன். எ.று.
சேல் - ஒருவகை மீன்; மகளிர் கண்ணுக்கு உவமமாவது. கமலம் - தாமரை; ஞாயிறு தோன்றும் காலைப்போதில் மலர்வதாகலின், “காலை மலர்ந்த கமலம்” எனக் கூறுகிறாள். கவின் - அழகு. சோகம் - தளர்ச்சி; ஈண்டுக் காதல் வேட்கை மிகுதியால் உளதாவது. காமநோய் மாலைப் போதில் மிகுவதாகலின், “மாலை மலர்ந்த மையல் நோய்” எனவும்; அதற்குச் சிறப்புத் தருவது வேனிற் பருவமாகலின், “வசந்தமதனால் வளர்ந்தது” எனவும்; ஆற்றாமை பற்றி, “ஐயோ” எனவும் உரைத்து வருந்துகிறாள். (9)
|