1613. உலகம் உடையார் என்னுடைய
உள்ளம் உடையார் ஒற்றியினார்
அலகில் புகழார் என்தலைவர்
அந்தோ இன்னும் அணைந்திலரே
கலகம் உடையார் மாதர்எலாம்
கல்நெஞ் சுடையார் தூதர்எலாம்
திலக முகத்தாய் என்னடிநான்
செய்வ தொன்றும் தெரிந்திலனே.
உரை: திலகமணிந்த நெற்றியையுடைய தோழி, உலகங்கள் அனைத்தையும் உடைமையாக வுடையவரும், எனது உள்ளத்தைத் தமக்கு உரியதாகக் கொண்டவரும், திருவொற்றியூரை யுடையவரும், அளவிறந்த புகழை யுடையவரும், எனக்குத் தலைவருமாகிய சிவபெருமான், ஐயோ, என்னை இன்னமும் வந்து கூடினா ரில்லையாக, சூழவுள்ள மகளிர் கலகம் செய்ய, எனக்காக தலைவர்பால் தூது செல்லத் தக்கவரும் கன்மனமுடையராக வுள்ளனர்; இந்நிலையில் செய்வ தொன்றும் விளங்காமல் நான் திகைக்கின்றேன், காண். எ.று.
திலகம் - மகளிர் நெற்றியிலணியும் வாசனைப் பொட்டு. “திலகம் தைஇய தேங்கமழ் திருநுதல்” (முருகு) என்பர் சான்றோர். உலகங்கள் அனைத்தும் உயிர்களின் பொருட்டு இறைவனாற் படைக்கப் பட்டவை யாதலின், “உலகம் உடையார்” எனக் கூறுகிறாள். உள்ளத்தில் எப்போதும் நினைக்கப்படுவது தோன்ற, “என்னுடைய உள்ளமுடையார்” என்கின்றாள். அலகு - அளவு. புணரா விரகு தோன்ற “இன்னும் அணைந்திலர்” என அறிவிக்கின்றாள். மேனி வேறுபாடு காணும் மகளிர் அம்பலும் அலரும் கூறுதல் பற்றிக் “கலகம் உடையார் மாதரெலாம்” எனவும், தூது போதற்குரிய செவிலியும் தோழியும் அது செய்யாமை விளங்க, “கன்னெஞ்சுடையார் தூதரெலாம்” எனவும் இயம்புகிறாள். செய்வது தெரியாமல் திகைப்புறுதற்கு இவை காரணமாமாறு காண்க. (10)
|