1614.

     மாலும் அறியான் அயன்அறியான்
          மறையும் அறியா வானவர்எக்
     காலும் அறியார் ஒற்றிநிற்குங்
          கள்வர் அவரைக் கண்டிலனே
     கோலும் மகளிர் அலர்ஒன்றோ
          கோடா கோடி என்பதல்லால்
     சேலுண் விழியாய் என்னடிநான்
          செய்வ தொன்றும் தெரிந்திலனே.

உரை:

      சேல் மீன் போன்ற கண்ணை யுடையவளே, திருமாலும் பிரமனும் அறியப்படாதவனும், வேதங்களாலும் உணரப்படாதவனும், தேவர்களால் எக்காலத்தும் காணப்படாதவனும், திருவொற்றியூரில் எழுந்தருளி அன்பர்களின் உள்ளத்தைக் கவரும் கள்வனுமாகிய சிவபிரானை, இன்றுவரையும் பார்த்திலேன்; கலகம் செய்யும் மகளிர் ஒன்றல்லர், பலர்; அவருரைகளைக் கூறக் கேட்பதல்லது வேறே ஒன்றும் செய்வகை யறியாது திகைக்கின்றேன். எ.று.

     திருமாலும் பிரமனும் பசுபாச ஞானங்களின் உருவாதல் பற்றி “மாலு மறியான் அயனறியான்” என்று கூறுகிறாள். மறை ஞானமும் பாச ஞானம் எனப்படுதலால், “மறையும் அறியா” என்கின்றாள். வானவர் மக்களினத்திற் பிறந்து செய்த நல்வினைப் போக நுகர்பவராய், அது கழிந்த பின் நிலவுலகிற் பிறந்திறந் துழலும் இயல்பினராகலின், “வானவர் எக்காலும் அறியார்” என வுரைக்கின்றாள். உண்மை யன்பர்களின் உள்ளத்தை அவர் அறியாதே கொள்ளைகொண்டு உறைதல் பற்றி, “கள்வர்” என இயம்புகின்றாள். கோலும் மகளிர் - கலகத்தைச் செய்யும் அயற் பெண்டிர். அலருரையின் மிகுதி விளங்க, “அலர் ஒன்றோ கோடா கோடி” என்று கூறுகிறாள். இதுவும் பொருந்துறு வேட்கையால் திகைத்து இரங்கற்கு ஏதுவாதல் காண்க.

     (11)