1615. உந்து மருத்தோ டைம்பூதம்
ஆனார் ஒற்றி யூர்அமர்ந்தார்
இந்து மிருத்தும் சடைத்தலையார்
என்பால் இன்னும் எய்திலரே
சந்து பொறுத்து வார்அறியேன்
தமிய ளாகத் தளர்கின்றேன்
சிந்துற் பவத்தாய் என்னடிநான்
செய்வ தொன்றும் தெரிந்திலனே.
உரை: கடலிற் பிறந்த திருமகளைப் போல்பவளே, மோதுகின்ற காற்று முதலிய ஐவகைப் பூதங்களானவரும், திருவொற்றியூரில் எழுந்தருள்பவரும், சந்திரனையும் கங்கையையும் கெடாது நிலைப்பிக்கும் சடை முடித்த தலையை யுடையவருமான சிவபெருமான், இன்னமும் என் பக்கல் வருகின்றாரில்லை; அவர்பாற் சென்று தூதுரைத்துக் கூட்டுவிப்பார் ஒருவரையும் தெரியாமல் தனியளாய் இருந்து மெலிகின்றேன்; செய்வதொன்றும் அறியாமல் தியங்குகிறேன். எ.று.
சிந்து - கடல். கடல் கடைந்த போது அதன்கண் தோன்றியவள் திருமகளாதலின் - அத் திருவை யொத்த தோழியைச் “சிந்துற் பவத்தாய்” என்று சிறப்பிக்கின்றாள். உந்தும் மருத்து - அலைத்து மோதும் காற்று. நில முதல் வானீறாகவுள்ள பூதமைந்தின் உருவானவன் என்றற்குச் சிவபெருமானை, “உந்து மருத்தோடு ஐம்பூதமானார்” என வுரைக்கின்றாள். காற்று - பூதம் ஐந்தனுள் ஒன்று. இந்து - பிறைச் சந்திரன்; உம்மையால் கங்கையும் கொள்ளப்பட்டது. நில்லாதியங்கும் இரண்டையும் சடையின்கண் இருக்க வைத்தமை தோன்ற, “இந்துமிருத்தும் சடைத் தலைவர்” என்று புகல்கின்றாள். சந்து பொறுத்தல் - தூதுரைத்து நட்புச் செய்தல். தனித்த வழி மனமும் மெய்யும் தளர்வுறுதல் இயல்பாதலின், “தமியளாகத் தளர்கின்றேன்” எனச் சொல்லுகின்றாள். தனிமையும் வேட்கையால் இரங்குதற்கு ஏதுவாதல் அறிக. (12)
|