1616.

     ஆடல் அழகர் அம்பலத்தார்
          ஐயா றுடையார் அன்பர்களோ(டு)
     ஊடல் அறியார் ஒற்றியினார்
          உவகை ஓங்க உற்றிலரே
     வாடல் எனவே எனைத்தேற்று
          வாரை அறியேன் வாய்ந்தவரைத்
     தேடல் அறியேன் என்னடிநான்
          செய்வ தொன்றும் தெரிந்திலனே.

உரை:

      கூத்தாடும் அழகுடையவரும், திருச்சிற்றம்பலத்தை யுடையவரும், திருவையாற்றில் கோயில் கொண்டவரும், மெய்யன்பர்களுடன் பிணங்குதல் இல்லாதவரும், திருவொற்றியூரை யுடையவருமான தியாகப் பெருமான், எனக்கு மகிழ்ச்சி மிக்குற என்பால் வருகின்றாரில்லை; அதனால் யான் எய்தும் வருத்தம் கண்டு என்னை ஆற்றுவிப்பாரையும் காணேன்; இயலும் இடம்பெற்றுத் தேடிச் செல்லுதற்குரிய அறிவும் எனக்கில்லை; இவ்வாற்றால் யான் செய்வ தறியாமல் திகைக்கின்றேன். எ.று.

     ஆடல் அழகு - படைத்தல் முதலிய ஐவகைத் தொழிலும் உலகில் நிகழ ஆடும் அழகு. ஆடும் இடம் இஃது என்றற்கு “அம்பலத்தார்” என வுரைக்கின்றாள். திருவையாறு காவிரிக்கரையிலுள்ள திருப்பதி. அன்புடையாரிடம் தவறில்லையாயினும் ஊடலும் கூடலும் நிகழ்தல் இயல்பாயினும், தலைவரிடம் அக்குறையும் தோன்றுவதில்லை யென்பாள், அன்பர்களோடு “ஊடலறியார்” எனக் கூறுகின்றாள். அன்பால் உளதாகிய மகிழ்ச்சியுடன் கூட்டத்தாற் பிறக்கும் இன்பம் மிகும் பொருட்டு என் பக்கல் வந்திலர் என்றற்கு, “உவகை யோங்க உற்றிலர்” என இரங்குகின்றாள். மனம் வருந்தி மெய் மெலிதல் கூடாதெனச் சொல்லி என்னைத் தெளிவிப்பவர், அவரையல்லது பிறர் ஒருவரும் இல்லை என்ற கருத்தால், “வாடல் எனவே எனைத் தேற்றுவாரை யறியேன்” என்று தெரிவிக்கின்றாள். அவர் இயலும் இடமும் எய்தும் காலமும் பெற்று அவரைத் தேடி யடையவும் கூடவும் ஏற்ற நெறியும் முறையும் தெரியாது மயங்குகிறேன் என்பாளாய், “வாய்ந்து அவரைத் தேடல் அறியேன், செய்வ தொன்றும் தெரிந்திலன்” எனத் தோழியுடன் உசாவுகின்றாள்.

     (13)