1617.

     தொழுது வணங்கும் சுந்தரர்க்குத்
          தூது நடந்த சுந்தரனார்
     அழுது வணங்கும் அவர்க்குமிக
          அருள்ஒற் றியினார் அணைந்திலரே
     பொழுது வணங்கும் இருண்மாலைப்
          பொழுது முடுகிப் புகுந்ததுகாண்
     செழுமை விழியாய் என்னடிநான்
          செய்வ தொன்றும் தெரிந்திலனே.

உரை:

      நலமிக்க மை தீட்டிய கண்களையுடைய தோழி, கையாற் றொழுது மெய்யால் வணங்கும் சுந்தரமூர்த்தியின் பொருட்டுத் தூது சென்ற சுந்தரப் பெருமானும், அழுதழுது பரவிய திருவாதவூரருக்கு மிக்க திருவருளளித்தவரும், திருவொற்றியூரை யுடையவருமான சிவபெருமான் இன்னமும் என்னைச் சேர்ந்திலர்; மேற்றிசையில் ஞாயிறு தாழ்ந்து மறையும் இருள் கலந்த மாலைப்போதும் விரைவுடன் வந்துவிட்டது; வேட்கை மிகுதலாற் செய்வதறியாது மருளுகின்றேன். எ.று.

     சிவன் கோயில் கொண்டிருக்கும் பதிதோறும் சென்று கண்டு தொழுது சொன்மாலை பாடி வணங்கும் இயல்பினராதலால், நம்பியாரூரரை, “தொழுது வணங்கும் சுந்தரர்” என்றும், அவர் பொருட்டுத் திருவாரூரிற் பரவையார் திருமனைக்கு அவரது ஊடல் வெம்மை தணித்தற்கு தூது சென்ற வரலாறு நினைந்து, “தொழுது வணங்கும் சுந்தரர்க்குத் தூது நடந்த சுந்தரனார்” என்றும் சொல்லுகின்றாள். சுந்தரன் - அழகன். அன்பால் மனமுருகி அருட் பேறு வேண்டிக் கண்ணீர் பெருக்கி அழுதழுது உயர்ந்தவராதலின், திருவாதவூரரை, “அழுது வணங்கும் அவர்” என நினைக்கின்றாள். மாலைப் போதில் ஞாயிறு மேற்றிசையில் தாழ்ந்து மறைவது பற்றி, “பொழுது வணங்கும் இருண் மாலை” எனக் கூறுகின்றாள். பொழுது - ஞாயிறு. பகல் ஒளி குன்ற வரும் இருள் பரவிய மாலைக் காலம் “இருண் மாலை” எனப்படுகிறது. “காலையரும்பிப் பகலெல்லாம் போதாகி, மாலை மலரும்” காமநோய் என்பது கொண்டு, “இருள் மாலைப் பொழுது முடுகிப் புகுந்தது காண்” எனப் புகல்கின்றாள். முடுகுதல் - விரைதல். காதலுறவுற்ற மகளிர்க்குக் காதலர் பிரிவின்கண் மாலைப்போது காமநினைவுகளைத் தோற்றுவித்து வருத்துவது பெருந்திணை நங்கையின் பேதுறவுக்கு ஏதுவாயிற்று.

     (14)