1618. பாவம் அறுப்பார் பழிஅறுப்பார்
பவமும் அறுப்பார் அவம்அறுப்பார்
கோவம் அறுப்பார் ஒற்றியில்என்
கொழுநர் இன்னும் கூடிலரே
தூவ மதன்ஐங் கணைமாதர்
தூறு தூவத் துயர்கின்றேன்
தேவ மடவாய் என்னடிநான்
செய்வ தொன்றும் தெரிந்திலனே.
உரை: தேவருலகத்து இளமகள் போன்ற தோழி, அன்பர்களின் பாவங்களையும் எய்தும் பழிகளையும், பிறப்பும் இறப்பும் ஆகியவற்றையும் போக்குபவரும், சினமில்லாதவரும், திருவொற்றியூரில் எழுந்தருள்பவருமாகிய என் கணவர், இப்பொழுது வந்து கூறுகின்றாரில்லை; காமவேள் தன் மலரம்புகளைச் சொரிவானாக, அயல் மகளிர் அலர் மொழிகளைப் பேசுவதால் யான் ஆற்றாமல் வருந்துகின்றேன்; இதனால் அறிவு மயங்கிச் செய்வதறியாமல் திகைக்கின்றேன். எ.று.
பாவம் - தீவனை. பழி - தீச் செயலால் உளதாவது. பவம் - பிறப்பு. அவம் - ஈண்டு இறப்பின் மேற்று. கோபம், கோவ மென வந்தது. குணமே யுருவாகிய சிவன்பால் சினமாகிய குற்றம் தோன்றுதற் கிடமின்மையின், “கோவ மறுப்பார்” எனக் கூறுகின்றாள். கொழுநன்-கணவன். “கொழுநற் றொழு தெழுவாள்” (குறள்) எனச் சான்றோர் வழங்குவதறிக. மதன் - காமவேள். 'மதன் ஐங்கணை தூவ' என இயையும், தூறு - அலர் மொழிகள்; “அவதூறு பேசினார்” என்றாற் போல. ஐங்கணை - ஐவகை மலரம்புகள்; “விரைமலர் ஐங்கணை” (மணி. 5 : 5) என்று பிறரும் கூறுப. மலரம்புகளும் அலர் மொழிகளும் அறிவை மயக்குவனவாதலால், நங்கையின் திகைப்புக் கேதுவாயின. (15)
|