1619.

     உயிர்க்குள் உயிராய் உறைகின்றோர்
          ஒற்றி நகரார் பற்றிலரைச்
     செயிர்க்குள் அழுத்தார் மணிகண்டத்
          தேவர் இன்னும் சேர்ந்திலரே
     வெயிற்கு மெலிந்த செந்தளிர்போல்
          வேளம் பதனால் மெலிகின்றேன்
     செயற்கை மடவாய் என்னடிநான்
          செய்வ தொன்றும் தெரிந்திலனே.

உரை:

      ஒப்பனை யமைந்த இளையவளான தோழி, உயிர்தோறும் உயிர்க்குயிராய் இருப்பவரும், திருவொற்றி நகரை யுடையவரும், தன்பால் அன்பில்லாதவர்களைப் பல்வகைக் குற்றத்துக் குள்ளாக்காதவரும், நீலமணி போன்ற கழுத்தையுடைய தேவருமான சிவபெருமான் இன்னும் வந்து என்னைச் சேர்கின்றாரில்லை; அதனால், வெயில் வெம்மையால் வாடிய செந்தளிர் போலக் காமவேள் அம்புகளால் மேனி வாடுவதால் நான் செய்வ தொன்றும் தெரியாமல் திகைக்கின்றேன். எ.று.

     உயிர்க் குயிராதல் இறைவனது இறைமையாதலால், “உயிர்க்குள் உயிராய் உறைகின்றார்” என வுரைக்கின்றாள். “உரை சேரும் எண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனி பேதம், நிரை சேரப் படைத்தவற்றின் உயிர்க்குயிராய் அங்கங்கே நின்றான்” (வீழிமிழலை) என ஞானசம்பந்தர் நவில்வது காண்க. உயிர்க் குயிராதலாவது, உணர்வு வடிவினதாகிய உயிர்க்குண்ணின்று உற்ற விடத் துணர்வருளுதல். சிவன்பால் அன்பில்லாத வுள்ளத்தில் குற்ற நினைவுகள் தோன்றி நிறைந்து விடுதலால், அவரை யுய்வித்தற் பொருட்டு அதனுள் அழுத்திக் கெடுத்துப் பின் தூய்மை செய்தல் தோன்ற, “பற்றிலரைச் செயிர்க்குள் அழுத்தார்” என்கின்றாள்; “பரவுவாரையும் உடையார் பழித்து இகழ்வாரையும் உடையார்” (வாழ்கொளி) என்பர் ஞானசம்பந்தர். அகம் புற மென்ற இருவகைப் பற்றும் இல்லாத நன்மக்களைச் சின முதலிய குற்றவகைக் குட்படுத்தாதவர் எனினும் பொருந்தும். மணிகண்டம் - நீலமணி போன்ற கழுத்து. செந்தளிர் - இளந்தளிர்; மாந்தளிருமாம். வேள் - காமவேள். மகளிர் எப்போதும் தமது இயற்கை யழகைச் செயற்கை வகைகளால் ஒப்பனை செய்து கொள்ளும் இயல்பினராதலின், தோழியைச் “செயற்கை மடவாய்” என்று செப்புகின்றாள். காம வேட்கை நங்கையின் திகைப்புக் கேதுவாயினமை காண்க.

     (16)