162. சாறு சேர்திருத் தணிகை யெந்தை நின்
ஆறு மாமுகத் தழகை மொண்டுகொண்
டூறில் கண்களால் உண்ண வெண்ணினேன்
ஈறில் என்னுடை எண்ண முற்றுமோ.
உரை: விழாக்கள் பொருந்திய திருத்தணிகையில் எழுந்தருளும் எந்தையாகிய முருகனே, நின்னுடைய முகம் ஆறினுடைய அழகை முகந்து குற்றமில்லாத கண்களாற் பருக விரும்புகிறேன்; எல்லையில்லாத என்னுடைய ஆசை நிறைவேறுமோ, கூறுக, எ. று.
சாறு- விழா. விழாக்கள் மலிந்தமையின் சாறுசேர் திருத்தணிகை என்று சிறப்பிக்கின்றார். முகத்தழகு கண்டு இன்புறுவதைக் “கண்ணாற் பருகுதல்” என்னும் வழக்குப் பற்றி “ஆறுமாமுகத் தழகை மொண்டு கொண்டு கண்களால் உண்ண எண்ணினேன்” என்று கூறுகின்றார். மொண்டு கொள்ளல் - முகந்து பருகுதல். “முகத்தழகு பருக நோக்கி” என்பர் கம்பர். குறைபாடு இல்லாத கண்களால் நிரம்பப் பருகலாம் என்றற்கு “ஊறில் கண்களால்” என்றும், ஆசையின் அளவில்லாமை தோன்ற “ஈறில் என்னுடை எண்ணம்” என்றும் இயம்புகின்றார். எண்ணம், ஈண்டு ஆசை மேற்று.
இதனால் முருகப் பெருமானைத் தரிசிக்க வுண்டாகிய ஆசை மிகுதி கூறி அருள் வேண்டியவாறாம். (12)
|