1620. ஊனம் அடையார் ஒற்றியினார்
உரைப்பார் உள்ளத் துறைகின்றோர்
கானம் உடையார் நாடுடையார்
கனிவாய் இன்னும் கலந்திலரே
மானம் உடையார் எம்முறவோர்
வாழா மைக்கே வருந்துகின்றார்
தீனம் அடையாய் என்னடிநான்
செய்வ தொன்றும் தெரிந்திலனே.
உரை: குறை யொன்றும் மில்லாத தோழி, குற்றவகை யாதும் இல்லாதவரும், திருவொற்றியூரவரும், புகழ்பவர் உள்ளத்தில் உறைகின்ற வரும், காடும் நாடும் ஆகிய யாவையும் உடையவருமான சிவபெருமான் இன்னும் போந்து என்னைக் கூடியதிலர்; எமக்குரிய உறவினர் மிக்க மானவுணர்வு கொண்டவராதலால், நான் அவரைக் கலந்து வாழாமையை நினைந்து வருந்துகிறார்கள்; அது கண்டு யானும் செய்வ தறியாமல் திகைக்கின்றேன். எ.று.
ஊனம் - குற்றம். உரைப்பார் - புகழை யெடுத்து உரைப்பவர். உரைப்பார் உரை யுகந்து அவர் உள்ளத்தின்கண் நின்று நிறைந்தாலன்றி மேலும் உரைத்தற்கு இயலாதாகலின், “உரைப்பார் உள்ளத் துறைகின்றார்” என்று உரைக்கின்றாள். கானம் - காடு; சுடுகாடுமாம். நாடு - மக்களுறையும் நிலப்பகுதி. “நாடா கொன்றோ காடா கொன்றோ” (புறம். 187) என்பது காண்க. கனிதல் - அன்பால் மனம் குழைதல். மானம் - குற்றத்துக்கு அஞ்சும் பண்பு. வாழாமை - கணவனொடு கூடி வாழாமை. கணவனொடு உடனுறைவின்றி ஒருத்தி தனித் துறைதல் அவட்கே யன்றி உறவினர்க்கும் பழியும் இகழ்ச்சியும் உண்டாக்குவது பற்றி, “எம்முறவோர் வாழாமைக்கே வருந்துகின்றார்” எனப் புலம்புகிறாள். தீனம் - வறுமையால் உண்டாகும் குறை. வறுமையறியாத செல்வ மகளே என்பாள், “தீனம் அடையாய்” எனச் சிறப்பிக்கின்றாள். இது உறவினர் வருத்தம் கண்டு திகைத்தவாறாம். (17)
|