1621. மலையை வளைத்தார் மால்விடைமேல்
வந்தார் வந்தென் வளையினொடு
கலையை வளைத்தார் ஒற்றியில்என்
கணவர் என்னைக் கலந்திலரே
சிலையை வளைத்தான் மதன்அம்பு
தெரிந்தான் விடுக்கச் சினைக்கின்றான்
திலக நுதலாய் என்னடிநான்
செய்வ தொன்றும் தெரிந்திலனே.
உரை: திலக மிட்ட நெற்றியை யுடைய தோழி, மேருமலையை வில்லாக வளைத்தவரும், திருமாலாகிய எருதூர்தி மேல் வருபவருமாகிய சிவபெருமான், இங்கே வந்து என் கைவளை யுகச் செய்ததுடன் இடையிலுடுத்த சேலையும் நெகிழச் செய்தார்; ஒற்றியூரராகிய என் கணவரான அவர் போந்து என்னைக் கூடினாரில்லை; மன்மதன் தன் சிலையை வளைத்து அம்புகளை யாராய்ந்து தொடுக்கத் துடிக்கின்றான்; இந்நிலையில் யான் செய்வது தெரியாமல் திகைக்கின்றேன். எ.று.
முன்பு திலக முகத்தாய் என்றாராகலின், ஈண்டுத் “திலகநுதலாய்” என்று தோழியை அழைக்கின்றாள். மலை - மேருமலை, மால்விடை - திருமாலாகிய எருது; பெரிய எருது எனினுமமையும். வளை கழன்று உகுதலும் உடை நெகிழ்தலும் உடம்பு நனி சுருங்கல் என்னும் மெய்ப்பாடு. சிவபெருமானைக் கணவரென்கின்றாள். தானுற்ற காம வேதனையை “சிலையை வளைத்தான் மதன் அம்பு தெரிந்தான் விடுக்கச் சினைக்கின்றான்” எனவுரைக்கின்றாள். சினைத்தல் - கிளர்ந்தெழுதல். இது காம நோயாலுற்ற திகைப்பு. (18)
|