1622. பிரமன் தலையில் பலிகொள்ளும்
பித்தர் அருமைப் பெருமானார்
உரமன் னியசீர் ஒற்றிநகர்
உள்ளார் இன்னும் உற்றிலரே
அரமன் னியவேற் படையன்றோ
அம்மா அயலார் அலர்மொழிதான்
திரமன் னுகிலேன் என்னடிநான்
செய்வ தொன்றும் தெரிந்திலனே.
உரை: பிரமனது தலையோட்டில் உண்பலியேற்கும் பித்தரும், அருமை வாய்ந்த பெருமானும், வன்மை நிலை பெற்ற புகழையுடைய திருவொற்றியூரின்கண் உள்ளவருமாகிய சிவபெருமான், இப்பொழுதும் வருகின்றாரில்லை; இன்னும் கேள்; அயல் மகளிர் பேசும் அலருரை அராவப்பட்ட வேற்படையாய் வருத்துகிறது; இதனால் செய்வதறியாமல் திகைக்கின்றேன். எ.று.
பிச்சைப் பெருமானாய் உண்பலி ஏற்கும் திருவோடு பிரம கபாலமாதலின், “பிரமன் தலையிற் பலி கொள்ளும் பித்தர்” எனக் கூறுகின்றாள். நன்கலம் பல இருக்கப் பிரமன் தலையோட்டிற் பலியேற்பது பித்தர் செயலாக வுளது என ஒரு நலம் புலப்படுவது காண்க. பித்தராயினும் பேரருட் செல்வமுடைமையால் அருமையுடையவரென்பாள், “அருமைப் பெருமானார்” என மொழிகின்றாள். அசைவின்றிய நிலைபேறுடைய புகழ் என்றற்கு “உரமன்னிய சீர்” என வுரைக்கின்றாள். அரத்தால் அராவப்பட்ட வேற்படை கூரிதாகலின், “அர மன்னிய வேற்படை” என்கின்றாள். அயலார் கூறும் அலருரை கூறிய வேற்படைபோல் வருத்துகிறதென்பது கருத்து. அலருரையால் அறிவு திகைத்தமை கூறியதாம். (19)
|