1623.

     பவள நிறத்தார் திருஒற்றிப்
          பதியில் அமர்ந்தார் பரசிவனார்
     தவள நிறநீற் றணிஅழகர்
          தமியேன் தன்னைச் சார்ந்திலரே
     துவளும் இடைதான் இறமுலைகள்
          துள்ளா நின்ற தென்னளவோ
     திவளும் இழையாய் என்னடிநான்
          செய்வ தொன்றும் தெரிந்திலனே.

உரை:

      விளங்குகின்ற அணிகலன்களையுடைய தோழி, பவள நிறமுடைய மேனியையுடையவரும், திருவொற்றியூரில் எழுந்தருள்பவரும், பரசிவமாகியவரும், வெண்மை நிறமுடைய திருநீற்றையணிந்த அழகருமாகிய தியாகப் பெருமான், தனித்திருக்கும் என்பாற் போந்திலராக, நுணுகி மெலிகிறது என்னுடைய இடை; என் மார்பின் இளமுலைகள் விம்மித் துடிப்பது என்னளவில்தான் நிகழ்கிறதோ? இதனால் செய்வதறியாது திகைக்கின்றேன். எ.று.

     திவளுதல் - விளங்குதல். பொன்னும் மணியுமாகியவற்றால் ஆகிய இழைகளாகலின், “திவளும் இழையாய்” என்று சிறப்பிக்கின்றாள். செம்மை நிறம் பற்றி, “பவள நிறத்தார்” எனப் பகர்கின்றாள். நாத தத்துவத்தில் உறையும் சிவத்துக்கு மேலாய தத்துவாதீத சிவமென்றற்குப் “பரசிவனார்” என்கின்றாள். தவளம் - வெண்மை. வெண்ணீறு சண்ணித்த மேனியனாதல் விளங்க, “தவளநிற நீற்றழகர்” எனக் கூறுகிறாள். சார்பு - கருமச் சார்பு. இடை துவளும், இளமுலைகள் துள்ளா நின்றது என்னளவோ என இயையும். துள்ளா நின்றதென்பது காலங்காட்டும் தொழிற் பெயர். இடை நுணுகுவதும் இளமுலை விம்மித் துள்ளுவதும் வேட்கை மிகுதி யுணர்த்துவன என அறிக.

     (20)