1624. வண்டார் கொன்றை வளர்சடையார்
மதிக்க எழுந்த வல்விடத்தை
உண்டார் ஒற்றி யூர்அமர்ந்தார்
உடையார் என்பால் உற்றிலரே
கண்டார் கண்ட படிபேசக்
கலங்கிப் புலம்பல் அல்லாது
செண்டார் முலையாய் என்னடிநான்
செய்வ தொன்றும் தெரிந்திலனே.
உரை: செண்டு போன்ற கொங்கைகளையுடைய தோழி, வண்டு மொய்க்கும் கொன்றை மாலை யணிந்த சடையையுடையவரும், கடலைக் கடைய எழுந்த பொல்லாதவிடத்தை யுண்டவரும், திருவொற்றியூரில் எழுந்தருள்பவரும், எல்லாம் உடையவருமான தியாகப் பெருமான் என்பால் இன்னும் வந்திலர்; அதனால் உண்டான என் மேனி வேறுபாடு கண்ட அயல் மகளிர் தாந்தாம் நினைத்தபடி பேசுவாராக, நான் நிலை கலங்கித் தனித்து வருந்துவதன்றிச் செய்வது ஒன்றும் தெரியாமல் திகைக்கின்றேன். எ.று.
செண்டு - பூச் செண்டு; பூப்பந்துமாம். புதுப் பூவாதல் தோன்ற, “வண்டார் கொன்றை” எனவும், இடையறாது விளங்குதலின், “கொன்றை வளர்சடை” எனவும் இயம்புகிறாள். மதித்தல் - மத்திட்டுக் கடைதல். வல்விடம் - கொடுமையால் வன்மை மிக்க விடம். அமர்தல் - விரும்பியுறைதல். உடையார் - எல்லாவற்றையும் தனக்கு உடைமை யாகவுடையவர். காணும் அயல் மகளிர் தத்தம் மன நினைவில் தோன்றியவற்றைப் பேசுதல் கேட்டு வருந்துவது விளங்க, “கண்டார் கண்டபடி பேச” என்று கூறுகிறாள். இதனை “ஈரமில் கூற்றம் அலர் நாணல்” எனத் தொல்காப்பியர் சொல்லுவர். புலம்பல் - தனித் திருந்து வருந்துதல். இஃது அலருரைக்கு அஞ்சி எய்தும் திகைப்பு. (21)
|