1625.

     உணவை இழந்தும் தேவர்எலாம்
          உணரா ஒருவர் ஒற்றியில்என்
     கணவர் அடியேன் கண்அகலாக்
          கள்வர் இன்னும் கலந்திலரே
     குணவர் எனினும் தாய்முதலோர்
          கூறா தெல்லாம் கூறுகின்றார்
     திணிகொள் முலையாய் என்னடிநான்
          செய்வ தொன்றும் தெரிந்திலனே.

உரை:

      கற்போல் திண்ணிய கொங்கையை யுடையவளே, உண்ணா நோன்பருந்தும் தேவர்களால் உணர முடியாத ஒருவரும், திருவொற்றியூரில் எழுந்தருளுபவருமான என் கணவரான சிவபெருமான் அடியவளான என் கண்ணினின்றும் நீங்காத கள்வராயினும், இன்னும் போந்து என்னைக் கூடிற்றிலர்; நற்குணங்களை யுடையவராயினும், எனக்கு நற்றாயும் செவிலியுமாகியவர், கூறப்படாத சொற்களெல்லாம் சொல்லு கின்றார்கள்; நான் திகைப்புற்று வருந்துகிறேன். எ.று.

     உண்மை ஞானம் பெறல் வேண்டி உண்ணா நோன்பு மேற் கொண்டும் அதனைப் பெறாமல் மேலும் பெற முயன்றும் பரம்பொருளைக் காணமாட்டாராயினமையின், “உணவை இழந்தும் தேவரெலாம் உணராவொருவர்” என உரைக்கின்றாள். பரம்பொருள் ஒன்றேயாதலின், “ஒருவர்” என்று கூறுகிறாள். திருவொற்றியூர்ச் சிவமூர்த்தத்தைத் தனக்குக் கணவராகக் கொண்டமையின், “ஒற்றியில் என் கணவர்” என்றும், தனது நிலையை “அடியேன்” என்றும், தனக்கும் அவர்க்குமுள்ள அன்புறவை, “கண்ணகலாக் கள்வ” ரென்றும் இயம்புகிறாள். தாயரும் சுற்றமும் நற்பண்புடையராயினும் இப்போது எனது வேறுபாட்டொழுக்கங் கண்டு வெறுக்கின்றார்களென வருந்துவாளாய், “குணவரெனினும் தாய் முதலோர் கூறாதெல்லாம் கூறுகின்றார்” என மொழிகின்றாள். குணவர் - நற்குணமுடையோர். குணத்துக்கு ஒத்தன கூறாமல் மாறிப் பேசுவது புலப்பட, “கூறாதெல்லாம் கூறுகின்றார்” என்கிறாள். கூறாது கூறல் என்றதற்குக் குறிப்பு மொழிகளால் வைதல் எனினும் அமையும். கூறாதன கூறக் கேட்பது நங்கையின் திகைப்புக் கேதுவாயிற்றென்க.

     (22)