1626. வாக்குக் கடங்காப் புகழுடையார்
வல்லார் ஒற்றி மாநகரார்
நோக்குக் கடங்கா அழகுடையார்
நோக்கி என்னை அணைந்திலரே
ஊக்க மிகும்ஆர் கலிஒலிஎன்
உயிர்மேல் மாறேற் றுரப்பொலிகாண்
தேக்கங் குழலாய் என்னடிநான்
செய்வ தொன்றும் தெரிந்திலனே.
உரை: தேன் தங்கிய கூந்தலையுடைய தோழி, சொல்லுக் கடங்காத புகழ் மிக்கவரும், எல்லாம் வல்லவரும், திருவொற்றியூரை யுடையவரும், காட்சிக் கடங்காத அழகுடையவருமான தியாகப் பெருமான், என்னை நோக்கி என்பால் வந்திலராகலான், அலைகளைக் கரைநோக்கி யூக்கும் கடலின் முழக்கம் எனது உயிர்மேற் பகை கொண்டு உரப்பும் பேரொலியாய் விட்டது; அதனால் செய்வதறியாது திகைக்கின்றேன். எ.று.
பூவின் தேன் தேங்குகின்ற கூந்தலை, “தேக்கங் குழல்” எனத் தெரிவிக்கின்றாள். தேங்கங் குழல், தேக்கங் குழல் என எதுகை பற்றி வலித்தது. சொல்லுவார் சொல்லெல்லைக்குள் அடங்காது விரிகின்றமையால், “வாக்குக் கடங்காப் புகழுடையார்” எனவும், அதற்குக் காரணம் எல்லாவற்றையும் இனிது எளிதில் எஞ்சாமற் செய்யும் வன்மையுடைமை யாதலால் “வல்லார்” எனவும் வழுத்துகிறாள். பேரூரை மாநகர் என்னும் வழக்குப் பற்றி “ஒற்றி மாநகரார்” என்று கூறுகிறாள் காட்சி கரை காணாப் பேரழகுடையராதலால், “நோக்குக் கடங்கா அழகுடையார்” என நுவல்கின்றாள். ஊக்குதல் - தள்ளுதல். நீரலைகளை மலைபோல் திரட்டிக் கரைநோக்கிச் செலுத்துதலால், கடலை, “ஊக்க மிகும் ஆர்கலி” என வுரைக்கின்றாள். ஆர்கலி - கடல். காதல் வேட்கை மிக்குக் கையறவு படுபவர்க்குக் கடலொலி உறக்கமின்மை எய்துவித்து வருத்துதலால், “ஆர்கலி ஒலி என் உயிர் மேல் மாறேற்று உரப்பொலி காண்” எனக் கூறுகிறாள். மாறேற்றல் - பகை கொளல். உரப்பொலி - அச்சுறுத்தும் பேரொலி. இதுவும் நங்கையின் பேதுறவுக் கேதுவாயிற்று. (23)
|