1627. தரையிற் கீறிச் சலந்தரனைச்
சாய்த்தார் அந்தச் சக்கரமால்
வரையற் களித்தார் திருஒற்றி
வாணர் இன்னும் வந்திலரே
கரையில் புணர்ந்த நாரைகளைக்
கண்டேன் கண்ட வுடன்காதல்
திரையிற் புணர்ந்தேன் என்னடிநான்
செய்வ தொன்றும் தெரிந்திலனே.
உரை: தரையில் வட்டமிட்டு எடுத்த சக்கரத்தைக் கொண்டு சலந்தரனான அசுரனைக் கொன்றவரும், அந்தச் சக்கரப் படையைத் திருமாலாகிய வேங்கடமலையவற்குக் கொடுத்தவரும், திருவொற்றியூரில் வாழ்பவருமாகிய தியாகப்பெருமான் இன்னும் என்பால் வந்தாரில்லை; கரையிடத்தே சேவலொடு கூடி யின்புறும் பெடை நாரைகளைக் கண்டேனாக, கண்டதும் நானும் காதல் வேட்கையாகிய கடலுள் மூழ்கினேன்; அதனால் செய்வதறியாது திகைப்புறுகிறேன். எ.று.
மிகவும் வல்லவனாய் உயிர்கட்குத் தீங்கு புரிந்த அசுரன் சலந்தரன்; அவனைப் பிறர் எவரும் எத்தகைய படையாலும் வெல்ல மாட்டாராகச் சிவபிரான், நிலத்தில் கால் விரலால் வட்டமிட்டு எடுத்த சக்கரத்தைப் படையாகக்கொண்டு அவனை யழித்தாரென்பது புராணம். அதனை நினைவு கூர்ந்து “தரையிற் கீறிச் சலந்தரனைச் சாய்த்தார்” என்றும், அதனைப் பின்பு திருமாலுக் களித்தாரெனப்படுதலின், “அந்தச் சக்கரமால் வரையற் களித்தார்” என்றும் இசைக்கின்றாள். நீர் வாழ்வனவாயினும் நாரை முதலிய புள்ளினம் இரவில் நிலத்திற் சோலைகளிற் கூடமைத்துப் பெடையும் சேவலுமாய்க் கூடி வாழும் இயல்பினவாதலால், “கரையிற் புணர்ந்த நாரைகளைக் கண்டேன்” எனவும், அக்காட்சி என்னுட் காம வேட்கையை எழுப்பிக் கருத்தைக் கலக்கியதென்பாள், “கண்டவுடன் காதல் திரையிற் புணர்ந்தேன்” எனவும் கூறுகின்றாள். காதல் திரை - காதற் கடல். கடலிற் புணர்தல், ஈண்டுக் கடலில் மூழ்குதலாம். (24)
|