1628.

     பெற்றம் இவரும் பெருமானார்
          பிரமன் அறியாப் பேர்ஒளியாய்
     உற்ற சிவனார் திருஒற்றி
          யூர்வாழ் உடையார் உற்றிலரே
     எற்றென் றுரைப்பேன் செவிலிஅவள்
          ஏறாமட்டும் ஏறுகின் றாள்
     செற்றம் ஒழியாள் என்னடிநான்
          செய்வ தொன்றும் தெரிந்திலனே.

உரை:

     எருதேறும் பெருமானும், பிரமதேவனும் அறியமாட்டாத பேரொளிப் பொருளாகிய சிவபெருமானும், திருவொற்றியூரில் எழுந்தருள்பவனுமாகிய தியாகப் பெருமான் இன்னும் என்பால் வந்தாரில்லை; அதன் விளைவை என்னென்பேன்; என் செவிலித்தாய் தன் வாய் கொண்ட மட்டும் பேசி யேசுகிறாள்; சினம் சிறிதும் தணியாளாகின்றாள்; இதனால் செய்வதறியாது திகைக்கின்றேன். எ.று.

     பெற்றம் - எருது. “பெற்ற மூர்ந்த பெருமான்” (பிரபா) என்பர் ஞான சம்பந்தர். பிரமனும் திருமாலும் பிணங்கியபோது இருவராலும் காண்டற்கரிய பெரிய ஒளிப்பிழம்பாய் நின்றது பற்றிச் சிவனை, “பிரமனறியாப் பேரொளியாய் உற்ற சிவனார்” என வுரைக்கின்றாள். திருவொற்றியூரிற் கோயிற் கொண்டிருப்பதனால், “திருவொற்றியூர் வாழ்வுடையார்” எனக் கூறுகிறாள். செவிலி, தோழிக்குத் தாயும் தலைவிக்கு வளர்ப்புத் தாயுமாயவள். செவிலியின் செயற் கொடுமை கூறலுறுகின்றா ளாதலால், வியப்பு மேலிட்டு “எற்றென்றுரைப்பேன்” என வுரைக்கின்றாள். வாய் கொண்ட மட்டும் பேசி யேசுவதைக் குறிப்பு மொழியால் “ஏறா மட்டும் ஏறுகின்றாள்” என விளம்புகிறாள். செற்றம் - சினம். சின மொழியாள் எனக் கொண்டு, சினந்துரைகளையே பேசுதலுடையளாயினாள் எனினும் அமையும். இதனால் செவிலியின் சினவுரைகள் நங்கையின் திகைப்புக் கேதுவாதல் காண்க.

     (25)